
ஒரு நாட்டின் தேர்தலில் அண்டை நாட்டுத் தலைவரின் செயல் பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் அபூர்வ மானது. அதுதான் கனடா பொதுத் தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. கனடாவில் கடந்த ஏப். 28-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி எதிர்பாராத வெற்றியைப் பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் காரணமாகியிருக்கின்றன.
மொத்தம் உள்ள 343 இடங்களில் லிபரல் கட்சி 169 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. பெரும்பான்மைக்கு 3 இடங்கள் தான் குறைவு என்பதால் சிறிய கட்சியின் ஆதரவுடன் மார்க் கார்னி மீண்டும் பிரதமராவது உறுதியாகியுள்ளது. ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்ட கன்சர்வேடிவ் கட்சி கடந்த தேர்தலைவிட 7.7 சதவீதம் அதிக வாக்குகள் பெற்றாலும் 144 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
காலிஸ்தான் பிரிவினைவாதத்துக்கு ஆதரவான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி கடந்த தேர்தலில் 25 இடங்களில் வென்றிருந்தது ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்போது ஐக்மீத் சிங், அவர் போட்டியிட்ட பர்னாபி மத்திய தொகுதியிலேயே தோல்வியுற்றதுடன், வெறும் ஏழு இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வென்றிருக்கிறது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதமும் 2021 தேர்தலில் 18 சதவீதமாக இருந்தது; இப்போது ஆறு சதவீதமாகச் சுருங்கிவிட்டது. இதற்கு முந்தைய மூன்று தேர்தல்களில் லிபரல் கட்சிக்கு வெற்றி தேடித் தந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, உணவுப் பொருள்கள் மற்றும் வீடுகளின் விலை தாறுமாறாக அதிகரித்தது, உள்கட்சிப் பூசல் ஆகியவற்றின் காரணமாகப் பெரும் சரிவைக் கண்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு தொடர்ந்து சரிவையே கண்டு வந்தது.
கடந்த 2021-இல் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டபோது ட்ரூடோவுக்கு 63 சதவீத ஆதரவு இருந்தது. அது கடந்த ஜூனில் 28 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் ட்ரூடோ ராஜிநாமா செய்தபோது, அவரது கட்சிக்கு வெறும் 20 சதவீதம் தான் ஆதரவு இருந்தது. மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு 45 சதவீதமாக அதிகரித்திருந்தது.
எனினும், கனடா பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ ராஜிநாமா செய்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது ஆகியவை கனடா அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தின. தான் பதவியேற்றது முதலே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவரும் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைத்துக் கொள்வேன் என்று சூளுரைத்தார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல பொருளாதார நிபுணராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து குறுகிய காலத்திலேயே பிரதமரான மார்க் கார்னி, டிரம்ப்பின் இந்த அடாவடி அறிவிப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டோம் என்று உரக்க கூறியதுடன் அமெரிக்க துரோகத்தை மையமாக வைத்தே மார்க் கார்னியின் தேர்தல் பிரசாரம் அமைந்தது.
கார்னியின் ஆவேசமான பிரசாரம் வாக்காளர்கள் இடையே ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியதால் தோல்வியின் விளம்பில் இருந்த லிபரல் கட்சி கடந்த தேர்தலைவிட 10.9 சதவீதம் கூடுதல் வாக்குகள் பெற்று எதிர்பாராத வெற்றியுடன் தொடர்ந்து 4-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
அதிபர் தேர்தலில் அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்று டிரம்ப் பிரசாரம் செய்ததைப்போல கனடாவுக்கு முன்னுரிமை என்று கன் சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ்ரே பிரசாரம் மேற் கொண்டார் என்றாலும், அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகளுக்கு தாமதமாக எதிர்வினை ஆற்றியதால் அவரது பிரசாரம் எடுபடவில்லை.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த 2023 ஜூன் 18-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு உரியவர்களாக கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, தூதரக அதிகாரிகள் உள்ளனர் என்றும் கனடா அரசு அறிவித்தது. கனடாவில் வசிக்கும் 7.7 லட்சம் சீக்கியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தகைய நிலைப்பாட்டை ட்ரூடோ மேற்கொண்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த இந்தியா, தனது தூதரக அதிகாரிகள் 6 பேரைத் திரும்பப் பெற்றதுடன் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு உத்தரவிட்டபோது, இருநாட்டு உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்குலைந்தது. ஆனால், இப்போது பிரதமராகத் தேர்வாகி உள்ள மார்க் கார்னி இந்தியாவுடனான நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்தியாவுடன் நல்லுறவை மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு கனடா மண்ணில் இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவும், சீர்குலைந்த நல்லுறவை மீட்டெடுக்கவும் இந்தியாவும் கனடாவும் முயற்சிகள் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்க இருக்கும் கார்னியின் அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.