முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றிகரமாக நூறு நாள்களைக் கடந்து விட்டது. 'திரைப்பட பாணியில் நூறு நாள்களா?' என்று தவெக அரசின் ஆட்சியை எள்ளி நகையாட முற்பட்டால், அது அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆட்சியில் தொடர்கிறது என்ற பின்னணியில்தான் இந்தச் சாதனையை நாம் பார்க்க வேண்டும். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலைச் சந்தித்தது; அறுதிப் பெரும்பான்மைக்கான 118 இடங்களில் வெற்றி பெற முடியாமல் 108 இடங்களை மட்டுமே பிடித்தது; காங்கிரஸைத் தவிர வேறு எந்தவொரு கட்சியும் உடனடியாக ஆதரவு தராத நிலையில், தனிப் பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரியது; இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது; நம்பிக்கைத் தீர்மானம், ஆளுநர் உரை, முதலாவது பட்ஜெட் என்று பல சோதனைகளைக் கடந்து 100 நாள்களை நிறைவு செய்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு.
மேலே குறிப்பிட்ட சவால்களை இதுவரை தமிழகத்தில் ஆட்சி அமைத்த வேறு எந்த ஆளும் கட்சியும் சந்தித்ததில்லை. இதற்கு முன்பு 1952-இல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், 2006-இல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், அவற்றுடன் இப்போதைய தவெக அரசை எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. அவை இரண்டுமே அப்போது மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2006-இல் கருணாநிதி தலைமையில் வெறும் 96 இடங்களுடன் திமுக சிறுபான்மை அரசை அமைத்தபோது, மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது; திமுகவின் ஆதரவில்தான் அந்த ஆட்சியே அமைந்தது. அதனால், திமுகவின் சிறுபான்மை அரசை வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சிகளுக்கு இருந்தது.
வெளிப்படையாக திமுகவைத் தனது அரசியல் எதிரியாகவும், பாஜகவைக் கொள்கை எதிரியாகவும் அறிவித்துத் தேர்தலைச் சந்தித்த ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஓர் உறுப்பினர்கூட இல்லை. மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை
யிலும் ஆட்சி அமைக்க ஆதரவைப் பெற முடிந்தது என்பதால், பல்வேறு சவால்களுக்கு இடையிலும் நூறு நாள்களைக் கடந்திருப்பது முதல்வர் ஜோசப் விஜய்யின் மிகப் பெரிய வெற்றி.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்த ஜோசப் விஜய், மே 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றபோது, ''ஊழல், லஞ்சத்தை சகித்துக் கொள்ள மாட்டேன்; வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவேன்' என்கிற உத்தரவாதத்தை மீண்டும் உறுதி செய்தார்.
200 யூனிட் இலவச மின்சாரம், மாவட்டந்தோறும் போதை ஒழிப்பு காவல் நிலையங்கள், சிங்கப் பெண் அதிரடிப் படை ஆகிய மூன்று திட்டங்களில் முதல் கையொப்பமிட்டார். பதவியேற்ற மூன்றாவது நாளே நம்பிக்கைத் தீர்மானத்துக்காக சட்டப்பேரவையை எதிர்கொள்ள நேர்ந்தது.
பதவியேற்றதைத் தொடர்ந்து, அதிமுகவைத் தவிர அனைத்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது, தமிழக அரசியலில் புதியதொரு கலாசாரத்துக்கு அச்சாரமிட்டது. மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தது, முதல்வர் ஜோசப் விஜய்யின் அடுத்த வெற்றி.
'அரசியல் அனுபவம் என்பது ஆண்டுகளின் எண்ணிக்கையில் இல்லை; மக்களுக்குச் செய்யும் நன்மையில் மாத்திரம்தான் உள்ளது' என்று தனது முதலாவது சட்டப்பேரவை உரையில் முதல்வர் குறிப்பிட்டதை, கடந்த நூறு நாள்களில் அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகளும், நடைமுறைப்படுத்தி இருக்கும் திட்டங்களும், இலக்கு நிர்ணயித்து முன்னெடுக்கும் செயல்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன.
ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது; அம்மா உணவகங்களைச் சீரமைக்கும் நடவடிக்கை; சட்ட விரோதக் குவாரிகள் மீது நடவடிக்கை; வெளி மாநிலங்களுக்குக் கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை; பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்குமான முனைப்புகள்; ஊழல், லஞ்சம் தொடர்பாகப் பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண் என்று ஒன்றன்பின் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகள் கடந்த நூறு நாள் தவெக அரசின் வரவேற்புக்குரிய செயல்பாடுகள்.
தொடரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை; மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயம்; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே உள்ள திட்டங்கள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
'கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பது; நிர்வாக ரீதியாக மத்திய அரசுடனான மோதல் போக்கைத் தவிர்ப்பது' என்பது சரியான அணுகுமுறை. தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தருவதில்லை என்கிற உறுதியை சுதந்திர தின உரையில் வெளிப்படுத்தி இருப்பது தெளிவான அரசியல் பார்வை. தாண்ட வேண்டிய தடைகளும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் ஏராளம், ஏராளம். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் சாதுர்யம் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இருப்பதை முதல் நூறு நாள்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
*******
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
திருக்குறள் (எண் 666) அதிகாரம்: வினைத்திட்பம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





