தடம்புரளும் ஆறறிவு!

திருத்தணி சம்பவம்
திருத்தணி சம்பவம் எக்ஸ்
Updated on
2 min read

நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம், அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலம், சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியான மாநிலம் என்று பெயர் பெற்ற கேரளத்தில் வெளிமாநிலத்தவருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் கேரளத்தில் கடந்த டிச. 17-ஆம் தேதி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ஒப்பந்ததாரரான தனது உறவினர் சசிகாந்த் பகேலின் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு ராம் நாராயண் பகேல் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியில் முகவரி தேடி நள்ளிரவுக்கு மேல் அலைந்து திரிந்தபோது வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், திருடன் என்றும் நினைத்து உள்ளூர்வாசிகள் சிலர் அவரைத் தாக்கி கொன்றுவிட்டனர்.

தான் அப்பாவி என்று அவர் அழுது புலம்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவர் உண்மையாகவே திருடனாக இருந்திருந்தால்கூட, தாக்கியவர்கள் அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். சட்டத்தை அவர்கள் தங்கள் கைகளில் எடுத்திருக்கக் கூடாது. அவரை இழந்ததால், நோயாளியான அவரது தாய், அவரது மனைவி, 2 மகன்கள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளனர்.

கேரளத்தில் புலம்பெயர் தொழிலாளி கொல்லப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளில் இது மூன்றாவது சம்பவமாகும். இதற்கு முன்னர், அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த அசோக் தாஸ் (24) எர்ணாகுளத்தில் உள்ளூர்வாசிகளால் ஏப்ரல் 2023-இல் அடித்துக் கொல்லப்பட்டார். அடுத்து, பிகாரைச் சேர்ந்த ராஜேஷ் மாஞ்சி (37) திருடன் என கருதப்பட்டு மலப்புரத்தில் ஒரு கும்பலால் மே 2024-இல் கொல்லப்பட்டார்.

கேரளத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மலையாளிகள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் பணிபுரிவதால் புலம்பெயர்தலின் அவசியத்தையும் வலியையும் உணர்ந்தவர்கள் அந்த மாநில மக்கள். அப்படி இருந்தும், கேரளத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவது வியப்பாக இருக்கிறது. மொழி காரணமாக உள்ளூர் மக்களிடம் இருந்து அந்நியமாகி இருத்தல், குழந்தைகளின் கல்வி, கழிப்பறை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத தங்குமிடங்கள், பொருளாதார பாதுகாப்பின்மை போன்ற சவால்களைப் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

கேரள மாநில திட்ட வாரியத்தின் அறிக்கைபடி அந்த மாநிலத்தில் சுமார் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இது அந்த மாநிலத்தின் மொத்த தொழிலாளர்களில் 26 சதவீதம் ஆகும். இவர்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கம் (41 சதவீதம்), அஸ்ஸாம் (31 சதவீதம்), உத்தர பிரதேசம் (13) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளனர்.

கேரளத்துக்கு மற்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவது புதிது அல்ல. 1940-களில் இருந்தே தமிழர்கள் கேரளத்துக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனர். எனினும், தமிழர்கள் உணவு, நடை, உடை, பாவனையில் ஓரளவு அந்த மாநிலத்தவர் போன்றே இருப்பதால் இதுவரை பெரிய அளவில் பிரச்னைகள் எழவில்லை.

ஆனால், வடக்கில் இருந்து வருபவர்கள் தோற்றம், உணவு, உடை போன்றவற்றில் மலையாளிகளிடம் இருந்து மாறுபடுகிறார்கள். இவர்களால் தங்கள் வேலைவாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் கேரளத்திலும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்ற போக்கு கேரளம் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024- ஆம் ஆண்டு வரை புலம்பெயர் தொழிலாளர்கள் 33 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் கடந்த 2024 ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது ஓர் இளைஞர் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் 3 சிறுமியர் உயிரிழந்தனர். குத்தியவர் புலம்பெயர் இஸ்லாமியர் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதை அடுத்து, வெளிநாட்டவர்களுக்கு எதிராக அந்த நாட்டின் பல பகுதிகளில் பெரும் கலவரம் மூண்டது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் வெளிநாட்டவர் அவ்வப்போது தாக்கப்படுகின்றனர்.

தமிழகத்திலும் வட மாநிலத்தவர்களுக்கு எதிரான குரல்கள் அவ்வப்போது எழுகின்றன. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரை திருத்தணி, அரக்கோணத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் ரயிலில் கடந்த டிச. 27-ஆம் தேதி தாக்கி, பின்னர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பட்டாக்கத்தியால் தாக்கி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தமிழர்கள் நாட்டின் பிற மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் பரவி செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்கள் அங்கு தாக்கப்பட்டால் எந்த நிலைப்பாடு எடுப்போமா, அதே நிலைப்பாட்டை நமது மாநிலத்துக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர் குறித்தும் மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்தல் தவிர்க்க முடியாதது. தடுக்க முடியாதது. அவர்களது கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே நாகரிகமான, மேம்பட்ட சமுதாயத்தின் செயல்பாடாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com