பாஜகவின் தலைமுறை மாற்றம்!
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது. 14 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைவிட இரண்டு மடங்கு அதிகம்) உலகின் மிகப் பெரிய அரசியல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி ரகசியம், தனது அடிப்படைக் கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பதுதான். அந்தக் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாமல், அடித்தட்டு தொண்டர்வரை கொள்கைப் பிடிப்புடனும், கட்டுப்பாடுகளுடனும் இருப்பதால்தான் கடந்த 45 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை பாஜக அடைய முடிந்திருக்கிறது.
பாஜகவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. அரசியல் சூழலுக்கு ஏற்ப தலைமுறை மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்ளும் சாதுர்யம்தான் அது.
எல்.கே.அத்வானி (1986-91, 1993-98, 2004-05), முரளி மனோகர் ஜோஷி (1991-93), குஷாபாவ் தாக்கரே (1998-2000), பங்காரு லட்சுமணன் (2000-2001), ஜனா கிருஷ்ணமூர்த்தி (2001-2002), வெங்கையா நாயுடு (2002-2004), ராஜ்நாத் சிங் (2005-2009, 2013-2014), நிதின் கட்கரி (2009-2013), அமித் ஷா (2014-2020), ஜெ.பி.நட்டா (2020-2026) என்று தலைமைகள் தொடர்ந்து மாறி இப்போது அந்தக் கட்சியின் 12-ஆவது தேசியத் தலைவராக 45 வயது நிதின் நபின் பொறுப்பேற்றிருக்கிறார். இந்தியாவில் பாஜகவைத் தவிர, வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இதுபோல தலைமை மாற்றம் ஏற்படவில்லை.
1951-ஆம் ஆண்டு, அக்டோபர் 21-ஆம் தேதி, இந்துமகா சபையில் இருந்து பிரிந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கத்தைத் தொடங்கியபோதும் இதேபோல, புதிய தலைவர்கள் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரமுடிந்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாரதிய ஜன சங்கத்தை வழிநடத்த அனுப்பப்பட்ட தீன தயாள் உபாத்யாய, அடல் பிகாரி வாஜ்பாய், பால்ராஜ் மதோக், எல்.கே.அத்வானி போன்றவர்கள் அதை வழிநடத்தி வந்தார்கள்.
45-வயது நிதின் நபின், கட்சியின் 45-ஆவது ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகி இருப்பது வியப்பளிக்கும் ஒற்றுமை. 2020 ஜனவரி 20 முதல் தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவிடம் இருந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 20, 2026-இல் நிதின் நபின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார். இதுபோன்ற தலைமுறை மாற்றம் பாஜகவுக்குப் புதிதல்ல.
வாஜ்பாய், அத்வானி தலைமை தங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கத் தவறவில்லை. பின்னாளில் கட்சித் தலைவர்களானவர்கள் மட்டுமல்ல, வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), நரேந்திர மோடி (குஜராத்), எடியூரப்பா (கர்நாடகம்), சிவராஜ் சிங் செüஹான் (ம.பி.) உள்ளிட்ட பலர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டனர்.
அதே பாணியில் இப்போதைய நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையும், தலைமுறை மாற்றத்துக்கு இப்போதே பாஜகவைத் தயார்படுத்தி வருகிறது. யோகி ஆதித்யநாத் (உ.பி), தேவேந்திர ஃபட்னவீஸ் (மகாராஷ்டிரம்), மோகன் சரண் மாஜி (ஒடிஸô), மோகன் யாதவ் (ம.பி.) விஷ்ணுதேவ் சாய் (சத்தீஸ்கர்), புஷ்கர் சிங் தாமி (உத்தரகண்ட்) உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் இடம்பெறுபவர்கள்.
பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த நவீன் கிஷோர் சின்ஹாவின் திடீர் மறைவைத் தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு பாட்னா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அவரது மகன் நிதின் நபின் களமிறக்கப்பட்டபோது அவரது வயது 26 தான். இன்றுவரை ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிதின் நபின், நிதீஷ் குமார் தலைமையிலான பிகார் அமைச்சரவையில் அமைச்சராகப் பணிபுரிந்த அனுபவசாலியும்கூட. சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலத் தேர்தல்களில் பொறுப்பாளராக இருந்து வெற்றியை உறுதிப்படுத்தியதும் அவரது சாதனைப் பட்டியலில் இடம்பெறுகிறது.
பிரதமர் மோடிக்கோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கோ, தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவுக்கோ நெருக்கமானவரோ, நன்றாக அறிமுகமானவரோ அல்லர் நிதின் நபின். இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 100 இளம் தலைவர்கள் அந்தந்த மாநிலத் தலைமையால் பரிந்துரைக்கப்பட்டு, அடையாளம் காட்டப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் தீர விசாரித்து, அவர்களது ஒழுக்கம், நேர்மை, கொள்கைப் பிடிப்பு, கட்சிக் கட்டுப்பாடு, அரசியல் சாதுர்யம் என அனைத்தும் ஆராயப்பட்டன; பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் நிதின் நபின்.
’அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' என்கிற பாஜகவின் மாணவர் அமைப்பிலும், "பாரதிய யுவ மோர்ச்சா' என்கிற இளைஞர் அமைப்பிலும் புடம் போடப்பட்ட நிதின் நபின், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பாஜகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸôம் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் அஸ்ஸôமை தக்கவைத்துக் கொள்வதும், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பதும், தமிழகம், கேரளம் இரண்டிலும் வலுவாகத் தடம் பதிப்பதும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள்.
”நான் கட்சித் தொண்டன்; இவர்தான் என் கட்சித் தலைவர்' என்று பிரதமர் நரேந்திர மோடியே சொல்லிவிட்ட பிறகு, நிதின் நபின்தான் பாஜகவின் ’பாஸ்', சந்தேகமென்ன...

