ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றாக இந்த அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதினால் அது சரியான முடிவு அல்ல.
ஏமாற்றம் தரப்போகும் மாற்று!
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த "அமைதிக் குழு' எனும் புதிய சர்வதேச அமைப்பு உதயமாகியிருக்கிறது. போருக்குப் பிந்தைய காஸாவில் அமைதி நீடிப்பதை உறுதி செய்யவும், அங்கு மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், ஐ.நா. அமைப்புக்குப் போட்டியாக இந்தக் குழுவை டிரம்ப் உருவாக்கியிருப்பதாக கருதுவதற்கும் இடமுண்டு.

டிரம்ப் கையொப்பமிட்ட சாசனத்தில், "இந்த அமைதிக் குழுவானது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், நம்பகமான, சட்டபூர்வமான நிர்வாகத்தை மீட்டெடுக்கவும், நீடித்த அமைதியைப் பாதுகாக்கவும் முனையும் ஒரு சர்வதேச அமைப்பாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் ஐ.நா. அமைப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான முயற்சியாக இது இருக்கக்கூடும்.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்துக்கு இடையே இந்தப் புதிய அமைப்பைத் தொடங்கி வைத்த டிரம்ப், "இந்தக் குழு அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகுக்கானது. காஸாவில் நாம் வெற்றி பெறும்போது, மற்ற உலகளாவிய பிரச்னைகளுக்கும் இதை விரிவுபடுத்தலாம்' என்று கூறியதிலிருந்து அவரது நோக்கமும் அமெரிக்காவின் நோக்கமும் தெளிவுறத் தெரியவந்தது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்தே ஐ.நா. உள்பட சர்வதேச அமைப்புகளுக்கு எதிராகவே டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா அண்மையில் வெளியேறவும் செய்தது. இந்தியா - பிரான்ஸ் தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உள்ளிட்ட 35 சர்வதேச அமைப்புகளும், ஐ.நா.வின்31 அமைப்புகளும் இதில் அடங்கும்.

அந்த 66 அமைப்புகளும் அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், எனவே, அந்த அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்ட காரணம் வேடிக்கையானது. ஏனெனில், ஐ.நா.வாக இருந்தாலும், வேறு எந்த ஒரு சர்வதேச அமைப்பாக இருந்தாலும்

இன்றைய சூழலில் அமெரிக்காவின் நலனுக்கு எதிராக யார் என்ன செய்துவிட முடியும்?

நாடுகளுக்கு இடையிலான போர், சச்சரவுகள் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்கு அவ்வப்போது எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஐ.நா. மேற்கொள்ளும் தீர்மானங்களை பெரும்பாலான நாடுகள் மதிப்பதில்லை, செயல்படுத்துவதில்லை என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், ஐ.நா. அமைப்பில்தான் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும், வலுப்படுத்த வேண்டுமே தவிர, ஐ.நா. மேற்கொள்ளும் பணியைச் செய்வதற்காக மற்றோர் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

இப்போதைய நிலையில் புதிய அமைதிக் குழு அமைப்பில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. அதில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அல்பேனியா, அஜர்பைஜான், ஆர்மீனியா, ஆர்ஜென்டீனா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, ஹங்கேரி, இஸ்ரேல், கஜகஸ்தான், மங்கோலியா, மொராக்கோ, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ்,ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்குழுவில் இணைய மறுத்துள்ளன. ஐ.நா.வின் அதிகாரத்தை டிரம்ப்பின் அமைதிக் குழு சிதைக்கக்கூடும் என்பது இந்த நாடுகளின் முக்கியக் கவலை. இந்த அமைப்பில் இணைய ரஷியாவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்ததற்கு பிரிட்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் இணைவது பற்றி ரஷியா இன்னும் முடிவு எடுக்கவில்லை.

அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த அமைப்பில் இணைவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இந்தி யா தவிர்த்தது. புதிய அமைப்பின் சாதக, பாதகங்களை அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதால் அதில் இணைவது குறித்து

இந்தியா இறுதி முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளே இதில்இணையாத நிலையில், அவசரப்பட்டு இணைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

அமைதிக் குழுவின் நிர்வாக உறுப்பினர்களாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜரேத் குஷ்னர், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர் கேப்ரியல் உள்ளிட்டோரை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. முழுக்க முழுக்க அமெரிக்காவின் செல்வாக்கே இப்போதைக்கு இந்த அமைப்பில் காணப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் சீரழிந்துள்ள காஸாவின் மறுசீரமைப்பு மிக முக்கியம். அதற்கு இந்தப் புதிய அமைப்பு உண்மையிலேயே உதவி புரிந்தால் அது அனைவராலும் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றாக இந்த அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதினால் அது சரியான முடிவு அல்ல. அதிபர் டிரம்ப்பின் முடிவால் ஐ.நா.வும் அதன் அமைப்புகளும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போகும் ஆபத்தை (விபத்தை) ஏற்படுத்தக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com