உழவினார் கைம்மடங்கின்...

இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் வேளாண் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் வேளாண் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையையே நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பருவநிலை மாற்றம், பாசன நீர் பற்றாக்குறை, விதைகள், உரங்கள், விவசாயக் கூலி ஆகியவற்றுக்கான அதிகரித்த செலவு; குறைவான பருவமழைப் பொழிவு; நிலையற்ற சந்தை; போதுமான அளவில் இல்லாத பாதுகாப்புக் கிடங்குகள் உள்ளிட்ட இடர்களால் வேளாண் பெருமக்கள் நிலைகுலைந்துபோய் நிற்கிறார்கள். பெரும் நிலச்சுவான்தார்கள் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடிகிறது என்றால், குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் வேறு வழியில்லாமல் வேளாண் தொழிலை கைவிடத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கு அரசு வழங்கும் ஒரே தீர்வு அவ்வப்போது வெளியிடப்படும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் மட்டுமே. விவசாயிகளுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எதுவுமே முனைப்புடன் செயல்படுத்தப்படுவதில்லை.

இடஒதுக்கீடு கோரி நடத்தப்படும் போராட்டங்களும், அரசு ஊழியர்களின் போராட்டங்களும், அவ்வப்போது வெடிக்கும் மாணவர்கள் போராட்டங்களும் உடனடியாக ஆட்சியாளர்களின் அவசர கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், தொடர்ந்து பலவிவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் ஏற்பட்டும்கூட, அவர்களது பிரச்னையை முதன்மைப் பிரச்னையாக எடுத்துக்கொள்ள எந்தவொரு அரசும் முன்வருவதில்லை.

மேலை நாடுகளைப்போல் அல்லாமல் இந்தியாவில் விவசாயம் என்பது தொழில் அல்ல; வாழ்வாதாரம். பல குடும்பங்கள் தாங்களே நிலத்தில் உழுது பயிரிட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், அவர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றனவே தவிர, விளைபொருள்களுக்கு போதிய விலைஉறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

உலகளாவிய அளவில் இன்னொரு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. விவசாய சாகுபடி பரப்பு ஒருபுறம் குறைந்து வருகிறது என்றால், இன்னொருபுறம் வேளாண்மையில் ஈடுபடுவோர் குறைந்து வருகிறார்கள். அதனால் சர்வதேச அளவிலேயே விவசாயம் மிகச் சவாலான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் பருவநிலை மாற்றம், இன்னொருபுறம் சாகுபடிப் பரப்பு ஆக்கிரமிப்பு- இவை இரண்டுக்கும் மேலாக வேளாண்மையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவு என மூன்று மிகப்பெரிய சவால்களை உலகம் எதிர்கொள்கிறது.

வேளாண் பண்ணைகள் குறைந்து வருகின்றன என்றால், முதியவர்கள் மட்டுமே விவசாயத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள். உலகளாவிய அளவில் விவசாயிகளின் சராசரி வயது, பணி ஓய்வு வயதை நெருங்கிய 55 என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வேளாண் கல்லூரிகள் பல இருந்தாலும் இளைஞர்கள் அதைத் தொழிலாக மேற்கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டுகின்றனர். வேளாண்மையில் பட்டம் பெற்ற பலர், பிற தொழில்களை நாடும் போக்குதான் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, 1991-இல் மொத்த வேலைவாய்ப்பில் 43% விவசாயம், விவசாயம் தொடர்பான வேலைகளாக இருந்தன. 2023-இல் அது 26% ஆகக் குறைந்திருக்கிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 விவசாயிகள் வேளாண்மையைக் கைவிடுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை இப்படியே தொடருமானால், உலகளாவிய அளவில் பல லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள் அல்லது விவசாயத்தில் இருந்து வேறு தொழில்களுக்கு மாறியிருப்பார்கள்.

வேளாண்மை என்பது அடிப்படையான பொருளாதார இயக்கம். பல வகையிலும் அது தனித்துவமானது. அதன் அடிப்படை வேளாண்மைக்கான நிலம். அந்த நிலம் பல்வேறு பயிர்களைப் பயிரிடக்கூடிய பயன்பாட்டைக் கொண்டது.

பருவநிலையைச் சார்ந்த தொழில் விவசாயம் என்பதால், பருவநிலை மாற்றம் சாகுபடி சுழற்சியைப் பாதிக்கிறது. தொடர்ந்து மூன்று போகம் விளையும் நிலங்களில் ஒரு போகம் மட்டுமே பயிரிடக்கூடிய சூழ்நிலையைப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உணவு தானியங்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்ப விவசாய உற்பத்தியின் அளவை அதற்கேற்ப அதிகரித்துவிட முடியாது.

விவசாயம் என்பது தொழிலாளர்களை மையப்படுத்தியதாக இருப்பதால், தேவைக்கேற்ப அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாக வேண்டும். ஆனால், இளம் தலைமுறையினருக்கு விவசாயத்திலும், விவசாயப் பணிகளிலும் நாட்டமில்லாத நிலை காணப்படுகிறது.

மிகப் பெரிய சவால் சாகுபடி நிலப்பரப்பு. விளைநிலங்கள் குடியிருப்புகளாகவோ, நெடுஞ்சாலைகள் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காகவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்றப்படும் நிலையில் விவசாயத்துக்கான சாகுபடிப் பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. உலகளாவிய அளவில் 2020-இல் 61.6 கோடி விவசாயப் பண்ணைகள் இருந்த நிலையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் அவை 27.2 கோடியாகச் சுருங்கும் என்று அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வளர மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு நகர்வதும், நகர்மயமாதல் அதிகரிப்பதும், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணமாகின்றன. வேளாண்மையின் வீழ்ச்சியில் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது பேராபத்தை நோக்கிய மனித இனத்தின் பயணம் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com