கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது சுமத்திய அபாண்டமான களங்கம் இப்போது துடைக்கப்பட்டிருக்கிறது. 2023-இல் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்திய அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை அமெரிக்கா முன்னெடுத்த விசாரணை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
இரு நாட்டு உறவையே பாதிக்கும் விதத்தில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி இருந்தார். நிஜ்ஜார் கொலைப் பழி சர்வதேச அளவில் இந்தியாவின் கெüரவத்துக்கே களங்கம் ஏற்படுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், கனடா பிரதமரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நிஜ்ஜார் படுகொலை விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததால், இந்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.
காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்னெடுக்கும் சீக்கிய பிரிவினைவாதிகளின் சரணாலயமாகவே மாறிவிட்டிருக்கிறது கனடா எனலாம். கனடாவில் வாழும் சீக்கியர்களில் 'காலிஸ்தான்' கோரிக்கையை முன்வைக்கும் சீக்கியர்கள் மிகவும் குறைவுதான் என்றாலும், பிரிவினைவாதிகள் ஏனைய சீக்கியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையைத் தூண்டி வருவதை நிறுத்தவில்லை. அவர்களுக்குத் தாயக சீக்கியர்களின் ஆதரவு இல்லை. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை மையமாக்கி, தஞ்சமடைந்த நாட்டில் வன்முறை அரசியலை முன்னெடுத்து வந்தனர் 'காலிஸ்தான்' பயங்கரவாதிகள்.
கனடாவுக்கான இந்தியத் தூதர்களுக்குக் கொலை மிரட்டல் அனுப்புவது, அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் ஆங்காங்கே பதாகைகளை நிறுவுவது, பிந்தரன்வாலே உள்ளிட்ட கொல்லப்பட்ட சீக்கிய பயங்கரவாதிகளைப் போற்றும் விதத்தில் அலங்கார வாகனங்களில் அணிவகுப்பு நடத்துவது, இந்தியத் தூதரகத்துக்குத் தாக்குதல் எச்சரிக்கை விடுப்பது என்று அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.
இது குறித்து கனடா அரசிடம் இந்தியா தனது ஆட்சேபணைகளையும் கண்டனங்களையும் தெரிவித்தாலும் முந்தைய ஜஸ்டின் ட்ரூடோ அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசு காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்சி, ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து நிபந்தனை ஆதரவு வழங்கிவந்த நிலையில், காலிஸ்தானிய பிரிவினைவாதிகளைப் பிரதமர் ட்ரூடோ ஆதரித்ததில் வியப்பில்லை.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ரவி சர்மா என்ற போலிப் பெயரில் கடவுச்சிட்டை எடுத்து 1997-ஆம் ஆண்டு கனடாவின் டொராண்டோ நகரில் தஞ்சமடைந்தார். அங்கே பிளம்பராக வேலை பார்த்தபடி, காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். பஞ்சாப் காவல் துறையினரால் குண்டு வெடிப்பு, கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அவர். தேடப்பட்டு வரும் குற்றவாளியான நிஜ்ஜாரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கனடா அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய ஸர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது வாகனத்துக்கு அருகில், தலையில் சுடப்பட்ட நிலையில் நிஜ்ஜாரின் சடலம் கிடந்தது. அதன் பின்னணியில் சீக்கிய பிரிவினைவாதக் குழுக்களுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுதான் காரணம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பிரச்னையைத் தனக்கு அரசியல் ரீதியாகச் சாதகமாக்க முற்பட்டார் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்தியாவின் மீது பழி சுமத்துவதன் மூலம் சீக்கிய வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்பதுடன், தனது அரசுக்கான ஆதரவையும் வலுப்படுத்திக்கொள்ள முற்பட்டார்.
கனடா நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா மீதான தனது குற்றச்சாட்டை முன்வைத்த ஜஸ்டின் ட்ரூடோ அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து அமைந்த மார்க் கார்னி அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அமெரிக்க உளவுத் துறையின் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இப்போது அந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசின் தலையீடு இருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது.
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட இந்தியாவின் உளவுத் துறை அதிகாரி ஒருவரின் கூட்டாளி அந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி, இந்தியாவில் சபர்மதி சிறைச்சாலையில் இருக்கும் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான சமூக விரோதக் கும்பல்தான் அந்தக் கொலையைச் செய்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. அது இன்னொரு கேள்வியை இப்போது எழுப்பி இருக்கிறது.
இந்தியச் சிறைகளில் இருந்து சர்வதேச அளவில் செயல்படும் குழுக்கள் இயங்க முடிவது எப்படி என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு நாம் விடை கண்டாக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் - பதிவாளருக்கு முன்ஜாமின்!

நிஜ்ஜாா் கொலை: இந்திய அரசுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை - கனடா காவல் துறை

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்; 499 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்!

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



