இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% பேர் இருபது வயதுக்கும் கீழே உள்ளவர்கள்; அதாவது, மாணவர் பருவத்தினர். இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கவும், வளமை சேர்க்கவும் காத்திருக்கும் யுகத்தின் வருங்காலம் அவர்கள். உயரப் பறக்கத் துடிக்கும் அவர்களது சிறகுகள் ஒரு முறை அல்ல, தொடர்ந்து மூன்று தடவை அண்மைக்காலமாக சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பது வேதனை அளிக்கிறது.
22 லட்சம் பேர் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், மறு தேர்வு நடத்தப்பட உள்ளது; சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளும், விமர்சனங்களும் விவாதப் பொருளாகி இருக்கின்றன; இவையெல்லாம் போதாதென்று, இப்போது தொழில்நட்பக் கோளாறு காரணமாக பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) நடத்தப்படுவதிலும் குளறுபடி நிகழ்ந்துள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவும், "க்யூட்' தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதமும் ஒருபுறம் இருக்க, சிபிஎஸ்இ தேர்வில் நடந்திருக்கும் குளறுபடிகள், எந்த அளவுக்கு பொறுப்பற்ற விதத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போடுகிறது. தேர்வு நடத்துவதில் சீர்திருத்தம் மேற்கொள்வது, மதிப்பீட்டை துல்லியமாக்குவதற்கும், தேர்வு முறையை மேம்படுத்துவதற்கும் பயன்பட வேண்டுமே தவிர, மாணவ, மாணவிகளின் நலனுக்கு எதிராக இருப்பது ஏற்புடையதல்ல.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களது பட்டப்படிப்புக்கான வாய்ப்புகள், அதனால் தடைபடும் எனும்போது, அந்த மாணவர்களும், பெற்றோரும் ஆத்திரம் அடைவதில் வியப்பில்லை.
வினாத்தாள் திருத்தத்தை எண்ம முறையில் மாற்றுவது என்கிற வாரியத்தின் முடிவில் தவறு காண முடியாது. எந்தவொரு தேர்வு முறையும் சீர்திருத்தப்பட்டு தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை வரித்துக் கொள்வது அவசியத் தேவை. ஆனால், சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, விடைத்தாள் திருத்தத்தை எண்ம முறைக்கு மாற்ற நினைத்ததுதான் தவறு.
விடைத்தாள்களை மெய்நகல் (ஸ்கேன்) செய்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் "ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்' எனப்படும் கணினி மூலம் மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது சிபிஎஸ்இ வாரியம். அதன் மூலம் புகார்களும், மறு மதிப்பீடு கோருதலும் குறையும் என்பது அதன் எதிர்பார்ப்பாக இருந்தது.
தேர்வு முடிவு வெளியான அன்றே 7% மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் மெய்நகல் பதிவுகளைக் கோர முற்பட்டனர். அவற்றைப் பெற்றபோது, தங்களது கையெழுத்தைத் தாங்களே கூடப் படிக்க முடியாத அளவிலான மெய்நகல் பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்த நாள் மீள் மதிப்பீட்டு விண்ணப்பத்துக்கான இணையதளமே முடங்கி விட்டது. ஏனென்றால், சுமார் 1.15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்க தலைப்பட்டனர் என்று தெரிகிறது.
விடைத்தாள்களை மெய்நகல் செய்யும் பணி தனியார் வசம் தரப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 விடைத்தாள்களை மெய்நகல் செய்ய, தானியங்கி மெய்நகல் இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெய்நகல் செய்யப்பட்ட விடைத்தாள்கள் சரியாகப் பதிவாகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தாமல், விடை திருத்துவதற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தவறு நடந்திருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிந்து பொறுப்பேற்கச் செய்வதுதான், இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில், மாற்றங்களைப் புகுத்துவதற்கு முன்பு முறையான சோதனைகளை நடத்தாதது சிபிஎஸ்இ-யின் தவறு. ஜனவரி மாதம் ஐந்து பள்ளிக்கூடங்களில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்களின் விதியை நிர்ணயிக்கும் விடைத்தாள் திருத்தத்தை, ஏதோ விளையாட்டாக அந்த வாரியம் கருதி இருப்பதாகத் தெரிகிறது.
ஓ.எஸ்.எம். எனப்படும் "ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' முறையில் விடைத்தாள் திருத்தம் என்பது வரவேற்கக்கூடிய தொழில்நுட்ப மாற்றம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. அதன் மூலம் தங்களது விடைத்தாள்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதை மாணவர்களே உடனடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், விடைத்தாள்கள் முறையாக நகலெடுக்கப்படாமலும், தாள்களின் வரிசை எண்கள் விடுபடுதலும் இருந்தால் என்ன செய்வது?
எண்மத் தொழில்நுட்பத்துக்கு மாறுவது மட்டுமே வளர்ச்சியாகவோ, மேம்பாடாகவோ ஆகிவிடாது. லட்சக்கணக்கான மாணவர்களின் வருங்காலம் தொடர்பான தேர்வு குறித்த மென்பொருள் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், முறையான கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற மாற்றங்களை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முற்படுவது பொறுப்பற்றதனம்.
மாற்றம் தேவைதான்; பல லட்சம் இளைஞர்களின் வருங்காலத்தை ஏமாற்றம் அடையச் செய்யும் விதத்தில் அது அமைந்துவிடக் கூடாது.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்.
இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
திருக்குறள் (எண் 664) அதிகாரம்: வினைத்திட்பம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல: மத்திய கல்வி அமைச்சகம்

மாற்றம் தந்த மதிப்பீடு!

நீட் தேர்வில் முறைகேடு! ஆயுர்வேத மாணவர் கைது! மாறுவேடத்தில் இருந்தவர்!
நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



