துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சிக்கனத்துக்கான நேரம்!

நிலைமை கை மீறிப் போய்விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்போது விடுத்திருக்கும் பிரதமரின் கோரிக்கைக்கு வலுசேர்ப்பது நமது கடமை...

News image

பிரதமர் மோடி

Updated On :13 மே 2026, 2:36 am IST

மக்கள் பொதுப் போக்குவரத்தையும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையும் பயன்படுத்துவதன் மூலம், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை சற்று தாமதமாக வந்திருக்கிறது. வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும், தங்க ஆபரணங்கள் வாங்குவதைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

அதேபோல, விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாகவும், சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். நிறுவனங்கள் கூடுமானவரையில் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய அனுமதிப்பதன் மூலம், அவர்களின் போக்குவரத்துக்காக பயன்படும் பெட்ரோல், டீசல் மிச்சப்படும் என்கிற கருத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய சோதனையை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்துகிறார் பிரதமர் என்பதுதான் அவரது உரையில் இருந்தும், கோரிக்கைகளில் இருந்தும் நாம் புரிந்துகொள்ளும் செய்தி. மார்ச் 2020-இல் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலின்போது முதலில் 14 மணிநேர ஊரடங்கை அறிவித்து, அதன் வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 24 முதல் மூன்று வாரங்கள் பொது ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (மே 10) அவர் விடுத்திருக்கும் வேண்டுகோளும், வரவிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இறக்குமதிச் சிக்கனம், வெளிநாட்டுப் பயணங்கள், தங்கம் விற்பனை உள்ளிட்டவற்றுக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான சூட்சுமம் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்கள் இப்போது மாதமொன்றுக்கு ரூ.30,000 கோடி இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இத்தனை நாள்கள் உலகளாவிய அளவில் காணப்பட்ட பாதிப்புகள், தட்டுப்பாடுகளில் இருந்து நரேந்திர மோடி அரசு இந்திய மக்கள் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்ளாமல் காப்பாற்றியதே மிகப் பெரிய சாதனைதான்.

உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை கடந்த 75 நாள்களாக மூடப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 50% அதிகரித்திருக்கிறது. அப்படி இருந்தும் மக்கள் பாதிக்கப்படாமல் இதுவரையில் மத்திய அரசு சமாளித்து வந்திருப்பதற்காக நாம் பாராட்ட வேண்டும்.

எரிசக்தித் தேவைக்காக புதைபடிம எரிசக்தியைத் தவிர்க்க தென்கொரியா தனது அணுமின் உற்பத்தியை 80% அதிகரித்திருக்கிறது; சீனா பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, தனது இருப்பில் இருந்து விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை வழங்கி வருகிறது; ஜப்பான் மீண்டும் அனல் மின் உற்பத்தியை அதிகரித்து, ஆஸ்திரேலியாவிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது.

வங்கதேசம், ஆர்ஜென்டீனா, மலேசியா, கிரீஸ், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. பிரேசில் டீசல் இறக்குமதிக்கு மானியம் வழங்கி, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குக் கூடுதல் வரி விதித்திருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் புதைபடிம எரிசக்தியின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பல நாடுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அதிகரித்து, அதன் மூலம் அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முனைந்திருக்கின்றன.

மேற்காசியப் போரின் பாதிப்பு சாமானியர்களைப் பாதிக்காமல் இனியும் தொடர முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படியே விட்டுவிட்டால், முன்பு இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொண்ட கடுமையான தட்டுப்பாட்டையும், அதன் விளைவாக எழும் மக்களின் கடும் கோபத்தையும் அரசு எதிர்கொள்ள நேரும் என்பதை முன்யோசனையுடன் புரிந்து கொண்டுள்ளதால்தான் பிரதமர் எரிவாயு சிக்கனம் குறித்து வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

2025-26-இல் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 173 பில்லியன் டாலர். தங்கம் இறக்குமதி 71.9 பில்லியன் டாலர். அவற்றுடன் வெளிநாட்டுப் பயணங்கள், ரசாயன உர இறக்குமதி இரண்டையும் சேர்த்துக் கொண்டால், 2026 நிதியாண்டில் நமது மொத்த இறக்குமதி 775 பில்லியன் டாலர். இதில் சமையல் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2026 நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி 24%, சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரித்திருக்கிறது. அது போதாதென்று, ரசாயன உரத்தின் இறக்குமதி 61% அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது என்றால், இன்னொரு புறம், வர்த்தகப் பற்றாக்குறை 25 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது. ஏற்கெனவே "எல் நினோ' காரணமாக பாதிப்புகள் ஏற்படலாம் என்று அச்சப்படும் நிலையில், விவசாயிகள் ரசாயன உர பயன்பாட்டைக் குறைப்பதால், மகசூல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதன் விளைவாக உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம்.

அந்நிய முதலீட்டாளர்கள், மேற்காசியப் போரைத் தொடர்ந்து, தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறும் நிலையும் இணைந்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணியில் ஒவ்வொரு டாலரையும் மிச்சப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.

பிரதமரின் வேண்டுகோள் எப்போதோ விடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிலைமை கை மீறிப் போய்விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்போது விடுத்திருக்கும் பிரதமரின் கோரிக்கைக்கு வலுசேர்ப்பது நமது கடமை...காலத்தின் கட்டாயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.