பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தட்டுப்பாடா, விலை உயர்வா?

பெட்ரோல், டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

News image

பெட்ரோல், டீசல். - PTI

Updated On :27 மே 2026, 6:00 am IST

பெட்ரோல், டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த மே மாதம் 15 -ஆம் தேதி முதல் கடந்த 12 நாள்களில் இதுவரையில் ரூ.7.50 படிப்படியாக உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னணியில் கடுமையான அழுத்தத்தை மத்திய அரசு எதிர்கொள்கிறது என்பது வெளிப்படுகிறது.

பிப்ரவரி மாதம் அமெரிக்கா- ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 69 டாலராக இருந்தது. இப்போது சராசரி இறக்குமதி விலை ஒரு பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து விட்டிருக்கிறது. அதனால், சர்வதேசச் சந்தையில் அதிகரித்திருக்கும் கச்சா எண்ணெய் விலையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசலையும் சந்தைப்படுத்தும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ.14, ஒரு லிட்டர் டீசலில் ரூ.42 இழப்பை எதிர்கொள்வதாகத் தெரிகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கின்றன என்றால், ஏப்ரல்-ஜூன் காலாண்டின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரியை மார்ச் மாதம் விலக்கிக் கொண்டதன் மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளித்த அரசு, இப்போது விலை அதிகரிப்பின் மூலம், அந்த நிறுவனங்கள் மேலும் அதிக அளவில் இழப்பை எதிர்கொள்வதைத் தடுக்க நினைக்கிறது.

சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் உலகின் ஏனைய பல நாடுகள், பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்குவதில்லை. சர்வதேச விலைக்கு ஏற்றாற்போல அந்த நாடுகளில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கப்படுவதால், இந்தியா இன்னொரு சிக்கலையும் எதிர்கொள்கிறது.

வர்த்தக சமையல் எரிவாயுவானாலும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் டீசலானாலும் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை. அதனால், ஒரு சில அதிகாரிகள்- விநியோகஸ்தர்கள்- பயன்பாட்டாளர்கள் கைகோத்துக் கொண்டு மானிய விலை பெட்ரோலியப் பொருள்களை அதிக லாபத்துக்கு மடைமாற்றம் செய்து விடுகிறார்கள்.

பொதுமக்களின் உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளோ, பெட்ரோல், டீசலோ போதிய அளவு கையிருப்பு இருந்தாலும், அவை மடைமாற்றம் செய்யப்படும்போது தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. வாகனங்களுக்கு ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் வழங்குவது என்றாலும்கூட, பொதுமக்கள் மத்தியில் பீதி உருவாகி, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்குவார்கள். அது சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மாறக்கூடும்.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையைப் படிப்படியாக அதிகரிக்க, அதன் மூலம் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பது என்பது அரசின் நோக்கமாகத் தெரிகிறது. மக்கள் விலை உயர்வால் ஆத்திரம் அடைவார்கள் என்றாலும், தட்டுப்பாடு ஏற்பட்டுத் தெருவில் இறங்கிப் போராடாமல் தடுக்க முடியும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.

அதிகரிக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்திக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கக்கூடும்.

தொடர்ந்து மூன்று மாதங்களாக நீண்டு நிற்கும் மேற்காசியப் போர் எதிர்பார்த்ததுபோல உடனடியாக முடிந்துவிடவில்லை.

இன்னும் சில மாதங்கள் நீண்டு நிற்கும் என்றுதான் தோன்றுகிறது. 80% -க்கும் அதிகமாக நமது தேவைக்கான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலையில், சில கசப்பான முடிவுகளை அரசு எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவுகளை பொதுமக்கள் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெகிழி, செயற்கை நூலிழை ஜவுளி (சிந்தடிக் டெக்ஸ்டைல்ஸ்), பெயிண்ட், டயர்கள் தொடங்கிப் பல பொருள்களின் விலைகள் கடுமையாக ஏறும். நுகர்வோர் தொடர்பான பொருள்களின் தயாரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 70% சரக்குப் போக்குவரத்து லாரிகள் மூலம்தான் நடைபெறுகின்றன. லாரி வாடகை அதிகரிப்பதால் அதன் தாக்கம் விற்பனை விலையை அதிகரிக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தல்வரை விலையை உயர்த்தாமல், இப்போது பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது வாக்காளர்களை ஏமாற்றுவதாக இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களில் ஓரளவு உண்மை இருந்தாலும், சர்வதேச நிலைமையைப் புரிந்து கொள்ளாத விமர்சனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த நிலைமையை இந்தியா எதிர்கொள்ளாமல் தப்பிவிட முடியாது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 38,000 கோடி டாலர் குறைந்திருக்கிறது. பெட்ரோல்-டீசல் பயன்பாட்டைக் குறைப்பது, தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது, வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிப் போடுவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் பிரதமரால் முன்மொழியப்பட்டிருக்கின்றன. கொவைட்-19 நோய்த் தொற்றுக் காலம் போல, நாம் இப்போது வேறொரு நெருக்கடியைச் சந்திக்கிறோம் என்பதை அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஆத்திரப்படுவதிலோ, விமர்சிப்பதிலோ, அரசியலாக்குவதிலோ அர்த்தமில்லை. நடிகர் கமல்ஹாசன் சொல்வதைப்போல, இது தேசம் எதிர்கொள்ளும் சவால். இணைந்து நிற்போம்!

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறைஒருங்கு நேர்வது நாடு.

(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத்

தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.

திருக்குறள் (எண் 733) அதிகாரம்: நாடு