மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சதுரங்க சாதனை!

கிராண்ட் செஸ் டூர் (ஜிசிடி) ஃபைனல்ஸ் போட்டியில் வெற்றி பெற்று இப்போட்டியில் சாம்பியனான முதல் இந்தியர் என்ற சாதனையை தமிழகத்தின் பிரக்ஞானந்தா நிகழ்த்தி இருக்கிறார்.

Praggnanandhaa

பிரக்ஞானந்தா - X | FIDE

Published On :3 செப்டம்பர் 2026, 6:15 am IST

கிராண்ட் செஸ் டூர் (ஜிசிடி) ஃபைனல்ஸ் போட்டியில் வெற்றி பெற்று இப்போட்டியில் சாம்பியனான முதல் இந்தியர் என்ற சாதனையை தமிழகத்தின் பிரக்ஞானந்தா நிகழ்த்தி இருக்கிறார். அமெரிக்காவின் செயின்ட் லூயி நகரில் கடந்த ஆகஸ்ட் 21 முதல் 28 வரை இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.

2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டி சற்று கடினமானது. 3 ரேபிட் பிரிவு, 2 கிளாசிக்கல் பிரிவு போட்டிகளில் பங்கேற்று 5 போட்டிகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்பவர்கள் ஜிசிடி ஃபைனல்ஸ் எனும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவர். கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று பிரிவும் அடங்கியதாக இறுதிப் போட்டி இருக்கும். அந்த வகையில் உலகின் முன்னணி வீரர்களாகவே இருந்தாலும் வெற்றிக்குத் தீவிரமாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் கொண்டது.

கடந்த முறை (2025) பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் நான்காம் இடம் பிடித்திருந்தார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியன் குகேஷ், சிறந்த ஆட்டக்காரர்களான அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோரும் இதற்கு முன்னர் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பிரக்ஞானந்தாவுக்கு முன்பு, விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்தாம் இடம்பிடித்ததே இந்தியரின் அதிகபட்சம் என்பதில் இருந்தே அவரின் இந்த வெற்றியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்த வெற்றி பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு எளிதில் வசமாகவில்லை. உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளவரும் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை இறுதிச் சுற்றில் எதிர்கொண்டார். கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்திலேயே ஃபாபியானோ வென்றார். இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது. பிளிட்ஸ் பிரிவில் இரண்டாவது ஆட்டத்திலும் எதிராளி வென்றார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், ஃபாபியானோ போன்ற ஜாம்பவான் ஆட்டக்காரருடன் மோதுபவர் சாதாரணமானவராக இருந்தால் "இந்தப் போட்டி எனக்கானது அல்ல, இந்த நாள் எனக்கு கைகூடவில்லை, அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம்' என்றே தளர்ந்துவிடுவார். ஆனால், ஃபீனிக்ஸ் பறவைபோன்று மீண்டெழுந்து வருவது என்பது பிரக்ஞானந்தாவுக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது என்றே கூறலாம். இந்தப் போட்டியிலும் தோல்விகளைக் கண்டு துவளாமல் அடுத்தடுத்த ஆட்டங்களில் கவனம் செலுத்தி 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டத்தை தனது வசமாக்கிக் கொண்டார்.

இதற்கு முன்னர், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடந்த மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற நார்வே செஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும் மண்ணின் மைந்தருமான மேக்னஸ் கார்ல்செனை அந்தப் போட்டியில் ஒரு முறை அல்ல, இரு முறை வென்று பிரக்ஞானந்தா சாதனை படைத்தார். உலகின் தலைசிறந்த வீரர்களில் 6 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியிலும் 6-ஆவது சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் பிரக்ஞானந்தா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் அவரது மூத்த சகோதரி வைஷாலி சாம்பியன் ஆகி சாதனை படைத்தபோதும் ஓபன் பிரிவில் 8 பேர் பங்கேற்ற போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்து பிரக்ஞானந்தா ஏமாற்றத்துக்கு உள்ளானார். ஆனால், அதிலிருந்து மீண்டு குறுகிய இடைவெளியில் நார்வே செஸ் போட்டி, செயின்ட் லூயி ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டி, கிராண்ட் செஸ் டூர் ஃபைனல்ஸ் என அடுத்தடுத்து 3 போட்டிகளில் வென்று தான் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

உலகின் முதல் சகோதரன் - சகோதரி கிராண்ட்மாஸ்டர்கள் என்ற சிறப்பை பெற்றவர்கள் வைஷாலி (25) - பிரக்ஞானந்தா (21). கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்த வைஷாலி உலக சாம்பியன் பட்டத்துக்காக சீனாவின் ஜு வென்ஜுனுடன் விரைவில் விளையாட உள்ளார். அதற்கு முன்னதாக, உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் செப். 15 முதல் 28 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கடந்த 2024-இல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா சாம்பியன் ஆகி இருந்தது. செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில், 2008-இல் ஆர்மீனியா வென்ற பிறகு அடுத்தடுத்து இரு போட்டிகளில் ஒரே நாடு வென்றதில்லை. அதேபோன்று, மகளிர் பிரிவில் 2018-இல் சீனா வென்ற பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் ஒரே நாடு வென்றதில்லை.

ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, மகளிர் பிரிவில் ஹம்பி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால் ஆகியோர் களம் காண்கின்றனர். இதில் வைஷாலி, பிரக்ஞானந்தா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வென்று புதிய சாதனை படைத்து தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

திருக்குறள் (எண் 595) அதிகாரம்: ஊக்கம் உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.