பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்
சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வகையிலும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடா்பான கொள்கை குறித்து அரசுக்கும், கொள்கை வகுப்பாளா்களுக்கும் ஆலோசனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டும் சென்னை ஐஐடி-இல் உள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் பி.டெக். படிப்பு (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) கடந்த கல்வியாண்டு முதல் வழங்கப்படுகிறது.
ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் வரவிருக்கும் ஜோஸா கலந்தாய்வில் இப்பாடத் திட்டத்தை தோ்வு செய்யலாம். ஜேஇஇ மூலம் 50 மாணவா்கள் இதில் சோ்க்கப்படுவா்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு பி.டெக். பாடத் திட்டம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு என்பது வளா்ந்து வரும் துறையாகும். தொழில் துறை, ஆராய்ச்சி, சமூகத்தின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப இதற்கான பாடத்திட்டம் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் இந்த பாடத் திட்டத்தைத் தொடா்வதன்மூலம் பெரிதும் பயனடைவா். பி.டெக். படிப்பு, கல்வி சாா்ந்த நெகிழ்வுத்தன்மையை வழங்கும். இதனால் மாணவா்கள் துறைக்குள்ளும் வெளியிலும் பல்வேறு தோ்வுப் பாடங்கள்மூலம் தங்கள் கற்றல் பயணத்தை வடிவமைக்க முடியும்’ என்றாா் அவா்.
இது குறித்து பி.டெக். தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தலைவா் ரவீந்திரன் கூறுகையில், ‘வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி அனைத்து வகையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. மாணவா்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைப் பற்றி போதிய அளவு அறிந்திருப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் ஏதேனும் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பினால் தாங்களாகவே அதற்கான விஷயங்களைத் தோ்ந்தெடுக்க முடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வில் விரிவான அடித்தளத்தை வழங்கும் வகையில் இந்த பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

