கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண்போம்! தினமணிக்கு எல்.முருகன் பேட்டி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

ஏ.பேட்ரிக்

நீலகிரி தொகுதி - தற்போதைய மத்திய இணை அமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் போட்டியிடுவதால் தேசிய அளவில் கவனம் பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. மத்திய செய்டி ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக களம் காண்கிறார். தேர்தல் பரப்புரைக்காக தொகுதியில் வலம் வந்து வாக்கு சேகரிக்கும் அவர், 'தினமணி' நாளிதழுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து...

மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால் நீலகிரி தொகுதியில் போட்டியிட மாட்டீர்கள் எனக் கூறப்பட்டது. பிறகு எப்படி இந்த திடீர் தேர்தல் பிரவேசம்?

பாஜகவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள அனைவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சித் தலைமை கட்டளையிட்டுள்ளது. நீலகிரி தொகுதியில் போட்டியிட 2019-ஆம் ஆண்டே வாய்ப்பு கேட்டிருந்தேன். அப்போது கூட்டணிக் கட்சிக்கு நீலகிரி ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நீலகிரியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்தி உள்ளேன். அதனால் இம்முறை இத்தொகுதியை தலைமையிடம் கேட்டுப் பெற்றுள்ளேன்.

தேர்தல் களத்தில் ஆ.ராசாவுடனான போட்டி எப்படி உள்ளது?

ராசாவை மக்கள் ஊழல்வாதியாகத் தான் பார்க்கின்றனர். சநாதன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, அருந்ததியினர், எம்ஜி.ஆர் குறித்து ஆணவமாகப் பேசியது போன்றவற்றையெல்லாம் மக்கள் ரசிக்கவில்லை. அத்துடன் நீலகிரியின் மேம்பாட்டுக்காக எந்தவொரு தொலைநோக்குத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்ற கோபமும் உள்ளது.

நீலகிரி மக்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்களா?

நீலகிரியில் அதிகம் வசிக்கும் படுகர் இன மக்கள் தேசிய கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள். தேசியவாதிகளாகவும், ஆன்மிகவாதிகளாகவும் உள்ள அவர்களிடம் பாஜகவுக்கு அமோக வரவேற்பு உள்ளது. பிரதமர் மோடியை ஓர் அவதார புருஷராகவும், மகானாகவும் பார்க்கின்றனர். 2047-இல் இந்தியாவை வல்லரசாக்க மோடியால் மட்டுமே முடியும் என்று முழுமையாக நம்புகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் தொழில்துறை நலிவடைய ஜிஎஸ்டி ஒரு முக்கியக் காரணம் என்கிறார்களே?

அது உண்மையல்ல. ஜிஎஸ்டி வரி விதிப்பை தொழில்துறையினர் வரவேற்கின்றனர். கருத்து அரசியலுக்காகவே சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர்.

கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது தேர்தலுக்காகவா?

கச்சத்தீவு விவகாரம் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்னை. அதற்கு மூலகாரணமே காங்கிரஸும், திமுகவும்தான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பாஜக முயல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் வளர்ச்சிக்கு செய்த உதவிகளை இலங்கையர்கள் மறக்கவில்லை. மேலும், நீலகிரி தொகுதியில் அதிகளவில் உள்ள தாயகம் திரும்பிய தமிழர்கள் கச்சத்தீவு பிரச்னையில் வெளிவந்துள்ள உண்மைகளால் கொதிப்படைந்துள்ளனர்.

வேல் யாத்திரை – என் மண், என் மக்கள் நடைப்பயணம் உண்மையில் மக்களிடையே எடுபட்டதா?

வேல் யாத்திரையை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் வென்றோம். அதேபோல, என் மண் என் மக்கள் நடைப்பயணத்தால் தமிழகம், புதுவையில் 40 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

கட்சியின் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதால் பிரசாரம் பாதிக்கப்படாதா?

கட்சித் தலைவர்கள் மற்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சி அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் பிரசாரம் உங்களை பலவீனப்படுத்தவில்லையா?

அது ஒற்றுமை இல்லாத, மக்களை ஏமாற்றும் கூட்டணியாகும். வாரிசு அரசியலைப் பிரதானப்படுத்தும் இந்தக் குழப்பக் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com