திருவையாறு: சமபலத்தில் திமுக - அதிமுக

திருவையாறு தொகுதியில் திமுக, அதிமுக சம பலத்தில் இருப்பதால் பொதுவான அலை, பிரசார வியூகத்தை பொருத்தே வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கல்லணை
கல்லணை


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் காவிரி மற்றும் அதிலிருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என அழைக்கப்படுகிறது.

இத்தொகுதியில் முதன்மையான தொழில் விவசாயம். இங்கு நெல், வெற்றிலை கொடிக்கால், வாழை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் திருக்கோயில், கர்நாடக இசை மேதையும், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜரின் சமாதி, பூண்டி மாதா பேராலயம், அரசு இசைக் கல்லூரி போன்றவை உள்ளன.

இத்தொகுதி 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் சிவாஜி கணேசன் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று.

சத்குரு தியாகராஜர் ஆஸ்ரமம்
சத்குரு தியாகராஜர் ஆஸ்ரமம்

எல்லைகள்:

திருவையாறு வட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் ஒரு பகுதியும் கொண்ட இந்தத் தொகுதியில் இந்தலூர், கடம்பங்குடி, சோளகம்பட்டி, மாரனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராபட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர் இரண்டாம் சேத்தி, முதல் சேத்தி, பிள்ளையார்நத்தம், சீராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிக்குடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தொட்டாக்காடு, கொண்டவிட்டான்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளித்தோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை முதன்மை, வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டயம்பட்டி, சுரக்குடிப்பட்டி, ராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேறிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம், புதூர் சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பழையப்பேட்டை, தெற்கு சேத்தி, பழையபட்டி வடக்கு சேத்தி, புதுக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்கள்.

சமூக அமைப்பு

கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் ஆதிதிராவிடர், வன்னியர், முத்தரையர், உடையார் உள்ளிட்ட சாதியினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கோபுரம்
திருவையாறு ஐயாறப்பர் கோயில் கோபுரம்

பிரச்னைகள்

கடந்த 2011 - 16 ஆம் ஆண்டுகளில் அரசுப் போக்குவரத்து பணிமனை, அரசுத் தொழிற்பயிற்சி நிலையம், பூண்டி - திருக்காட்டுப்பள்ளி காவிரிப் பாலம், ஆறுகளில் படுக்கை அணைகள் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக எதிர்கட்சியாக இருந்ததால், கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் குறிப்பிடும்படியாகப் பெரிய அளவுக்கு வளர்ச்சி இல்லை.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

கல்லணையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தாலும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலை விரிவாக்கப் பணி முடிவடையவில்லை. தஞ்சாவூர் - அரியலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு ரூ.2,639 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

திருவையாறு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச் சாலை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டாலும், அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

பூதலூர், செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் மற்றும் அவற்றைச் சார்ந்த 81 ஏரிகள் மூலம் 7,000 ஹெக்டேர் பாசன நிலங்கள் உள்ளன. இக்கால்வாய்களையும், ஏரிகளையும் முழுமையாகத் தூர்வாரி, நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இத்தொகுதியில் மழைக் காலத்தில் காவிரி, கல்லணைக் கால்வாய் கரையோரம் வெள்ளம் ஏற்படும் காலத்தில் அபாய நிலை உள்ளது. விவசாயம் சார்ந்த இத்தொகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஆறுகளில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தாலும், இன்னும் கட்டப்பட வேண்டிய தடுப்பணைகள் ஏராளமாக நிலுவையில் இருக்கின்றன.

கொள்ளிடத்தில் மணல் திருட்டு இத்தொகுதியில் மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. அரசு மணல் குவாரிகளாலும், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் புகார் எழுப்பி போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

திருவையாறில் அரசு மருத்துவமனை இருந்தாலும், இன்னும் மேம்படுத்தப்படாத நிலையில் உள்ளது. பூதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும், இன்னும் பழைய நிலையே தொடர்கிறது.

திருவையாறு நகரில் புதை சாக்கடை இல்லாததால், பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் செல்கிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகளின் நிலை:

மொத்தம் 14 தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தத் தொகுதியில் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் இரு முறையும், அதன் பிறகு திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், இத்தொகுதியில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் இல்லை என்ற குறை வாக்காளர்களிடையே நிலவுகிறது.

திமுக கூட்டணியில் இந்த முறையும் திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நம்பிக்கை அக்கட்சி தொண்டர்களிடையே நிலவுகிறது. இத்தொகுதியில் ஏற்கெனவே 4 முறை வெற்றி பெற்ற தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரனுக்கு மீண்டும் இந்தத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் அதிமுக போட்டியிட நிறைய வாய்ப்பு இருந்தாலும், பாஜகவும் முயற்சி செய்து வருகிறது. என்றாலும், இத்தொகுதியில் போடியிட அதிமுகவில் பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அதிமுகவே இத்தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தொண்டர்கள் கூறுகின்றனர்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக சமபலத்தில் இருப்பதால், பொதுவான அலை, பிரசார வியூகத்தை பொருத்தே வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வாக்காளர் விவரம்:

மொத்த வாக்காளர்கள் 2,67,796
ஆண்கள் 1,30,419
பெண்கள் 1,37,358
மூன்றாம் பாலினத்தவர் 19

இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1957 - சுவாமிநாத மேற்கொண்டார் (காங்கிரஸ்)
1962 - பழனி (காங்கிரஸ்)
1967 - ஜி. முருகையன் (திமுக)
1971 - கோ. இளங்கோவன் (திமுக)
1977 - கோ. இளங்கோவன் (திமுக)
1980 - எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (அதிமுக)
1984 - துரை. கோவிந்தராஜன் (அதிமுக)
1989 - துரை. சந்திரசேகரன் (திமுக)
1991 - பி. கலியபெருமாள் (அதிமுக)
1996 - துரை. சந்திரசேகரன் (திமுக)
2001 - கே. அய்யாறு வாண்டையார் (அதிமுக)
2006 - துரை. சந்திரசேகரன் (திமுக)
2011 - எம். ரெத்தினசாமி (அதிமுக)
2016 - துரை. சந்திரசேகரன் (திமுக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com