மேட்டூர்: வெல்லப்போவது யார்?

மாறியுள்ள அரசியல் சூழலில் யார் வெல்வார் என்பதை, கூட்டணி  பலமும், அரசு மீதான மதிப்பீடுகளும் தான் முடிவு செய்யும்.
மேட்டூர்: வெல்லப்போவது யார்?
மேட்டூர்: வெல்லப்போவது யார்?

தொகுதி நிலவரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீர் வழங்கும் தொகுதியாக மேட்டூர் திகழ்கிறது. மாநிலத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணை இத்தொகுதியில்தான் உள்ளது.

மேச்சேரி இன செம்மறி ஆடுகளும், தக்காளியும் சிறப்பு மிக்கவை. மேட்டூர் அணை மீன்களும், கொளத்தூர் சம்பா மிளகாயும் இத் தொகுதியின் தனிச் சிறப்பு. மேட்டூர் அனல் மின் நிலையம், ஜேஎஸ்டபிள்யூ, கெம்பிளாஸ்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இத் தொகுதியில் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதானத் தொழிலாக  உள்ளன.  மேட்டூர் அணை, மேட்டூர் அணை பூங்கா, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் இத் தொகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள்.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,45,073
பெண்கள்: 1,40,687
மூன்றாம் பாலினத்தவர்: 7
மொத்தம்: 2,85,767

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்:மேட்டூர் வட்டத்துக்கு உள்பட்ட காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி, தின்னப்பட்டி, கோனூர், கூணான்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி,  குலநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

மேட்டூர் நகராட்சியும், மேச்சேரி, கொளத்தூர், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன.

சமூக நிலவரம்:

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. பட்டியலின மக்கள் பரவலாக உள்ளனர். மலைவாழ் மக்கள் கணிசமான வாழ்கின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:

மேட்டூர் தொகுதி 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதன்முதலில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.அர்த்தநாரீஸ்வர கவுண்டர் வெற்றி பெற்றார்.

இங்கு அதிமுக 6 முறையும்,  காங்கிரஸ், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி தலா 2 முறையும், திமுக, தேமுதிக, பாமக  தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக கடந்த 1996-க்குப் பிறகு இத்தொகுதியில் வெற்றி பெறவில்லை.

இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்கள்:

1957:  கே.எஸ்.அர்த்தனாரீசுவர கவுண்டர் (காங்கிரஸ்)
1962: கே.எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் (காங்கிரஸ்)
1967: எம்.சுரேந்திரன் (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)
1971: எம்.சுரேந்திரன் (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)
1977: கே.பி.நாச்சிமுத்து கவுண்டர் (அதிமுக)
1980: கே.பி.நாச்சிமுத்து கவுண்டர் (அதிமுக)
1984: கே.பி.நாச்சிமுத்து (அதிமுக)
1989: எம்.சீரங்கன் (மார்க்சிஸ்ட்)
1991: எஸ்.சுந்தராம்பாள் (அதிமுக)
1996: பி.கோபால் (திமுக)
2001: எஸ்.சுந்தராம்பாள் (அதிமுக)
2006: ஜி.கே.மணி (பாமக)
2011: எஸ்.ஆர்.பார்த்திபன் (தேமுதிக)
2016: செ.செம்மலை (அதிமுக)
2016 தேர்தல் நிலவரம்:
எஸ்.செம்மலை (அதிமுக) 72,751 வெற்றி
எஸ்.ஆர்.பார்த்திபன் (மக்கள் தேமுதிக) 66,469
ஜி.கே.மணி (பாமக) 49,939
ரா.பூபதி (தேமுதிக) 5,892
நோட்டா 1,829
ப.பாலசுப்பிரமணியன் (பாஜக) 1,428 

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கொளத்தூர் ஒன்றியத்தில் தோனி மடுவு திட்டம் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு வனத் துறையின் ஒப்புதலுக்காக உள்ளது. மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் ரூ. 565 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீதிபுரம் செல்லும் பாதையில் பெரிய தண்டாவில் உள்ள தரைப் பாலம் மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. பாலமலை ஊராட்சியில் நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மின்வசதியே இல்லாத 11 குக்கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நங்கவள்ளி மேச்சேரி கூட்டுந்க் குடிநீர்ப்க் திட்டம் மூலம் கோனூர் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. "நடந்தாய் வாழி காவேரி' திட்டம் மூலம் மேட்டூர்நகரை சுற்றுலா நகரமாக மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேச்சேரி பகுதி விவசாயிகளின் நலன் கருதி தக்காளி  உற்பத்தியில் லாபம் ஈட்டும் வகையில் காமனோரியில் விவசாய உற்பத்திப் பொருள்களை சேமித்துப் பதப்படுத்தும் கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

தீர்க்கப்படாத பிரச்னைகள்:

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலமலை ஊராட்சிக்கு தார் சாலை, போக்குவரத்து வசதி வேண்டி, பாலமலை மக்கள் போராடி வருகின்றனர்.

கொளத்தூர் ஒன்றிய விவசாயிகள் பயன்பெற, தோனிமடுவு திட்டம், கோட்டையூர்- ஒட்டனூர் பரிசல் துறைகளில் காவிரியைக் கடந்து செல்வதற்கு பாலம் ஆகியவை தேவை.மேட்டூர் அணை மீனவர்கள் முகாம் அமைக்கும் இடங்களில் கூடாரம் அமைக்க மீன் வளத் துறை சார்பில் தார்பாலின்கள் வழங்கப்படவில்லை.

மேட்டூர் நீர்த் தேக்கத்தில் தேங்கும் பச்சை நிறப் படலத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை நிரந்தரமாகப் போக்க நடவடிக்கை தேவை. மேட்டூர் அணை கட்டுவதற்கு இடம் கொடுத்த மேட்டூர் தொகுதி விவசாயிகளின் பாசனத்துக்கு மேட்டூர் அணை நீரைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட வேம்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

அரசியல் நிலவரம்:

மேட்டூரில் அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் கூடுதல் வலு உள்ளது. பாமகவுக்கு தொகுதியை அளித்துள்ளதால் தற்போதைய எம்எல்ஏவான செம்மலைக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தற்போது பாமக வேட்பாளர் எஸ்.சதாசிவம் போட்டியிடும் நிலையில் எதிரே திமுக சார்பில் எஸ்.சீனிவாச பெருமாள் போட்டியிடுகிறார். மாறியுள்ள அரசியல் சூழலில் யார் வெல்வார் என்பதை, கூட்டணி பலமும், அரசு மீதான மதிப்பீடுகளும் தான் முடிவு செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com