தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!

திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன.

News image

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!

Updated On :5 ஏப்ரல் 2026, 11:57 pm

திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன.

சுவர் பிரசாரம்... தேர்தல் காலம் வந்தாலே கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு தனி உயிர்ப்பு காணத்தான் செய்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள், ட்ரோன் காட்சிகள் என நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், இன்னும் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் முகப்புகள், வாசகங்கள் எழுதும் பழக்கம் கிராமங்களில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும்.

இது வெறும் விளம்பரம் மட்டுமல்ல; இது ஒரு நினைவுச் சின்னம், அரசியல் கலாசாரத்தின் ஓர் அங்கமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரம் என்றாலே சுவர் எழுத்துகள்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

கிராமங்களின் சமூக ஊடகம்... அதன்படி, திருத்தணி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆர்.கே.பேட்டை, வங்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் தெருக்கள், நகரங்களின் முக்கிய சாலைகள், வீடுகளின் சுவர்கள் என அனைத்தும் அரசியல் வாசகங்களால் நிரம்பியிருக்கின்றன.

அதில் தேர்தல் நாள், வாக்களிப்பீர், மாற்றத்தை ஏற்படுத்துவோம், எங்கள் கட்சிக்கு ஆதரவு தருங்கள் போன்ற வாசகங்கள் மக்கள் மனதில் பதியும் வகையில் பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தொலைக்காட்சி, இணையதளம் போன்றவை அதிகம் இல்லாததால், சுவர் விளம்பரம் மிகவும் சக்திவாய்ந்த தகவல் பரப்பும் கருவியாக இருந்தது. இது அப்போதைய சமூக ஊடகமாக இருந்தது.

இன்றைய காலத்தில் வாட்ஸ்ஆப், முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்சிகள் தங்கள் செய்திகளை விடியோ, மீம், லைவ் நிகழ்ச்சிகள் மூலம் விரைவாகவும் பரவலாகவும் பொதுமக்களிடம் கொண்டு செல்கின்றன. இருப்பினும், சுவர் விளம்பரங்களின் தாக்கம் குறைந்துவிட்டதாகக் கூற முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்தின் சில பகுதிகளிலும் இன்னும் அது மக்களை நேரடியாக சென்றடையும் ஒரு கருவியாகவே உள்ளது.

போட்டிபோட்டு... சுவர் எழுத்துகள் ஒரு வகையில் கலை வடிவமாகவும் மாறியுள்ளது. வண்ணங்கள், எழுத்துருகள், வடிவமைப்புகள் ஆகியவற்றின் மூலம் அரசியல் செய்திகள் கவர்ச்சிகரமாக மாற்றப்படுகின்றன. சில நேரங்களில் இது ஒரு போட்டி போன்று மாறி, எந்தக் கட்சி அதிகம் மற்றும் அழகாக விளம்பரம் செய்கின்ற என்ற ஆரோக்கிய மோதல் காணப்படுகிறது. இதன்மூலம் உள்ளூர் ஓவியர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகிறது.

காலத்தால் அழியாத... நவீன நாகரிகம் எவ்வளவு முன்னேறினாலும், சுவர் விளம்பரங்கள் போன்ற பழைய நடைமுறைகள் முழுமையாக மறைந்துவிடவில்லை என்பது தேர்தல் காலம் வெளிக்காட்டிவிடுகிறது. அது ஒரு நினைவுச் சின்னமாகவும், மக்கள் கலாசாரத்தின் ஓர் பகுதியாகவும், அரசியல் தொடர்பின் பாரம்பரிய வடிவமாகவும் வாழ்கிறது. கடந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இந்தச் சுவர் எழுத்துகள் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

- ஜி. யோகானந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.