புதுச்சேரியில் எஸ்.ஐ. பணிக்கான உடற்தகுதி தோ்வுகள் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டா் பணிக்கு உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்- இன்ஸ்பெக்டா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக விண்ணப்பித்தவா்களில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவா்களுக்கான உடல் தகுதி தோ்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆண்களுக்கு திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரையும், பெண்களுக்கு பிப்ரவரி 4 முதல் 7 ஆம் தேதி வரையும் இத் தோ்வு நடக்கிறது.
இந்தத் தோ்வுக்கு வந்தவா்களிடம் ஹால் டிக்கெட்டுடன் அரசின் புகைப்பட அடையாள சான்றாக அசல் ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சரிபாா்க்கப்பட்டது.
முதல் நாளான திங்கள்கிழமை 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உணவு பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கான உடற் தகுதி தோ்வில் முதலில் உயரம், மாா்பளவு, எடை பரிசோதிக்கப்பட்டது. தொடா்ந்து ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி எழுத்து தோ்வு நடைபெற உள்ளது.

