புதிய குடும்ப அட்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது ?

புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பம் செய்வது குறித்து...
புதிய குடும்ப அட்டை
புதிய குடும்ப அட்டைகோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

குடும்ப அட்டை என்பது, மாநில அரசால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணம். இது நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கும், அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கும் அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது.

புதிதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி? குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை, எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் இங்கே..

குடும்ப அட்டைகளின் வகைகள்

* அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பெறும் குடும்ப அட்டை ( பச்சை நிறம்)

அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருள்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

* சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிறம்)

அரிசிக்குப் பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருள்களுடன் அரிசிக்கு பதிலாக கூடுதலாக 3 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.

* எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள் வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டாம் என்பதற்கான ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க யார் தகுதி வாய்ந்தவர்கள்?

இந்திய குடியுரிமை பெற்றவர்கள், தமிழ்நாட்டில் தனி சமையலறையுடன் வாழும் குடும்பமாக இருக்க வேண்டும். இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ ஏற்கெனவே எந்த ஒரு குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும். சேர்க்கப்பட்டிருந்தாலும் திருமணமாகி, அந்தக் குடும்ப அட்டையிலிருந்து பெயரை நீக்கியபிறகு புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான படிவம் எங்கு கிடைக்கும்?

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான (http://www.tnpds.gov.in) இல் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிவம் உள்ளது. பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

* சென்னையில் உள்ளவர்கள் – உதவி ஆணையாளர் (மண்டல அலுவலகம்).

* மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் – வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி பங்கீட்டு அலுவலர்.

* அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் (பதிவு அஞ்சல் பரிந்துரைக்கப்படுகிறது).

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

* வாக்காளர் அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, வாடகை ஒப்பந்த ரசீது, வங்கி கணக்கு புத்தகம், எரிவாயு இணைப்பு விவரம்– இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஆவணங்களை இணைக்க வேண்டும்.

* முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இருந்தால், ஒப்பளிப்பு சான்று மற்றும் குடும்ப அட்டை.

* பெற்றோர் அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்ததற்கான சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

* முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லையெனில் அதற்கான சான்று.

* முந்தைய குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தின் பதிவு எண் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான விவரம் ஏதேனும் இருப்பின் அவை பற்றிய விவரம்.

பரிசீலனை மற்றும் ஆய்வு

அதிகாரிகள் நேரில் கள ஆய்வுக்கு வருவர். நீங்கள் சொன்ன முகவரியில் வசிக்கீறீர்களா, தனியாக சமையல் செய்கீறீர்களா, எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்வார். ஆய்வுக்குப் பிறகு, 30-60 நாள்களுக்குள் உங்கள் மனுவின் முடிவு தெரிவிக்கப்படும்.

குடும்ப அட்டை கிடைத்த பிறகு...

குடும்ப அட்டை தயாரானதும், அதை எடுத்து செல்லுமாறு தகவல் வரும். அசல் ஒப்புகை சீட்டுடன் சென்று நேரில் பெற்றுக் கொள்ளலாம். குடும்பத் தலைவர் வர முடியாவிட்டால், அவருடைய அனுமதி கடிதத்துடன் மற்றொரு குடும்ப உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணமும் நெறிமுறைகளும்

*அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.5/- மட்டுமே. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

* நிர்ணயக் கட்டணத்தைவிட அதிகமாக யாரேனும் கேட்டால் புகார் அளிக்கலாம்.

குடும்ப அட்டையைப் பெற தாமதம் ஆகிறதா?

60 நாள்களுக்குள் முடிவு தெரியவில்லை என்றால், தொடர்புடைய அதிகாரிகளை நேரில் சந்திக்கலாம். தேவையான பட்சத்தில் மேல் முறையீடும் செய்யலாம்.

தவறான தகவல் அளித்தால்?

தவறான தகவல் அளித்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே, எளிய வழியில் புதிய குடும்ப அட்டையை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com