/

4.8.1976: த.நா. நகர நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்தது!

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

News image

4.8.1976 - Dinamani

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:24 pm IST

சென்னை, ஆக. 3 - தமிழ்நாடு நகர நில உச்சவரம்புச் சட்டத்தை ராஷ்டிரபதி இன்று பிறப்பித்தார். மத்திய நகர நில உச்ச வரம்புச் சட்டத்தின் மாதிரியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாய் அறிவிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் கீழ்க்கண்ட பகுதிகளில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது:

(1) சென்னை நகரப் பகுதி - 8 கிலோ மீட்டர் (சுமார் ஐந்து மைல்) சுற்றுப் பகுதி உள்பட. (இது "ஏ" வகையைச் சேர்ந்தது).

(2) மதுரை நகர பகுதி - 5 கிலோமீட்டர் (சுமார் 30 மைல்) சுற்றுப் பகுதி உள்பட. (இது "சி" வகையைச் சேர்ந்தது).

(3) கோயமுத்தூர் நகரப் பகுதி - 5 கிலோமீட்டர் (சுமார் 3 மைல்) சுற்றுப் பகுதி உள்பட. (இது "சி" வகையைச் சேர்ந்தது).

(4) சேலம் நகரப் பகுதி - 5 கிலோ மீட்டர் (சுமார் 30 மைல்) சுற்றுப் பகுதி உள்பட. (இது ”சி” வகையைச் சேர்ந்தது)

(5) திருச்சிராப்பள்ளி நகரப் பகுதி - 5 கிலோ மீட்டர் (சுமார் 3 மைல்) சுற்றுப் பகுதி உள்பட (இது "சி" வகையைச் சேர்ந்தது).

(6) திருநெல்வேலி நகரப் பகுதி - ஒரு கிலோ மீட்டர் (சுமார் 5 மைல்) சுற்றுப் பகுதி உள்பட. (இது "டி" வகையைச் சேர்ந்தது).

நகரங்களில் உள்ள நிலம் ஒரு சிலரின் கையில் குவியாது தடுக்கவும், அதில் ஹேஷ்ய பேரங்களுக்கும் லாப வியாபாரங்களுக் கும் இடமளிக்காமல் செய்யவும், பொது நலன்களுக்கு ஆன முறையில் நேர்மையாக நிலம் விநியோகம் ஆகுமாறு செய்யவும் மேற்கண்ட 6 நகர்களிலும் காலி இடங்களுக்கு இந்தச் சட்டம் உச்ச வரம்பு நிர்ணயம் செய்கிறது. ...

**

சர்க்காரியா கமிஷன் உத்தரவுகள் - பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ய கருணாநிதிக்கு ஒரு மாத வாய்தா

புதுடில்லி, ஆக. 3- கருணாநிதி மீதும், அவருடைய முன்னாள் மந்திரிசபை சகாக்கள் ஐவர் மீதும் பொது மகஜர்களில் கூறப்பட்ட புகார்கள் சம்பந்தமாக பதில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஒரு மாதம் நீடிக்க சர்க்காரியா கமிஷன் இன்று ஒப்புக் கொண்டது.

கமிஷன் விசாரணை செப். 10ந் தேதி ஆரம்பமாகும். அதற்குள் இந்த பதில் பிரமாண வாக்குமூலங்களைத் தாக்கல் செய்து விட வேண்டும்.

கருணாநிதி மீதும் மற்றும் ஐந்து முன்னாள் தி.மு.க. மந்திரிகள் மீதும் கூறப்பட்டுள்ள ஊழல், நிர்வாக அதிகார துஷ்பிரயோக புகார் குறித்து விசாரிக்க நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியாவைக் கொண்ட ஒரு நபர் கமிஷன் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டது தெரிந்ததே.

சென்னை செக்ரடரியேட்டிலுள்ள "பைல்களை' சோதித்துப் பார்த்து பதில் பிரமாண வாக்குமூலங்கள் தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வேண்டும் என்று எதிர் மனு தாரர்களின் வக்கீல்களான சாந்தி பூஷணும், ஜி. ராமஸ்வாமியும் கோரினர்.

இரு தரப்பும் பிரமாண வாக்கு மூலங்கள் தாக்கல் செய்ய முதலில் குறிப்பிட்டிருந்த தேதி ஜூலை 24.

"வீராணம் திட்டம் பற்றிய புகார்கள் சம்பந்தமாக மட்டும் சுமார் 11,000 'பைல்களை' பார்த்தாக வேண்டும். இந்த "பைல்" ஒவ்வொன்றும் சுமார் 100 பக்கங்கள் முதல் 200 பக்கங்கள் கொண்டவை. மற்ற புகார்கள் சுமார் 2900 'பைல்களில்' அடங்கியுள்ள விஷயங்கள். இந்த "பைல்களை' செக்ரடரியேட்டின் வேலை நேரத்தில்தான் பார்க்க முடியும்" என்று சாந்தி பூஷண் சுட்டிக் காட்டினார்.

வீராணம் திட்ட வழக்கில், சாட்சியம் பெரும்பாலும் தஸ்தா வேஜு பூர்வமானது என்றும், அந்த 'பைல்'களை சோதித்துப் பார்ப்பது பிரும்மாண்ட பணிதான் என்றும் நீதிபதி சர்க்காரியா ஒப்புக் கொண்டார். வீராணம் திட்ட வழக்கில் அவகாசத்தை இரண்டு மாதம் நீடிக்க அவர் இணங்கினார். ...

Summary

4.8.1976: The Tamil Nadu Urban Land Ceiling Act came into force

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.