உடல் சூடு அதிகரித்துவிட்டதா? இதோ ஒரு நல்ல தீர்வு

என் வயது 40. தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளேன். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை.
உடல் சூடு அதிகரித்துவிட்டதா? இதோ ஒரு நல்ல தீர்வு
Published on
Updated on
2 min read

என் வயது 40. தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளேன். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை. அமர்ந்து பணி புரிகிறேன். எனக்கு உள்ள பாதிப்பு என்னவென்றால் - எனது உடல் மிகவும்  சூடாக  உள்ளது.  எனது தோல் முகம் தவிர, பிற இடங்களில் சுருக்கமாக உள்ளது. சரியாகச் சீரணம் ஆவது இல்லை. மலச்சிக்கல் உள்ளது. மூலம் ஆரம்ப நிலையில் உள்ளது. அலுவலகத்தில் வேலை குறைவு. எனவே காலை 10 மணிக்கே தூக்கம் வருவது போல் உணர்கிறேன். சுறுசுறுப்பு இல்லை. மாலையில் முதுகின் கீழ்புறம் கனமாகவும், வலி நிறைந்தும் இருக்கிறது. என்ன மாத்திரை நான் சாப்பிட வேண்டும்? என் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்?

-தீபா, ஆனைமலை.

மனிதர்களுக்கு  வயிற்றுப் பகுதி உடலின் மத்திய பாகத்தில் இருப்பதால்  உடல் உறுப்புகள் தம் போஷணைக்காக வயிற்றை நம்பித்தான் வாழ்கின்றன. உணவின் சத்தான பகுதி பிரிக்கப்படுவதும், அதன் பட்டுவாடா உடல் பகுதிகளுக்குத் திறம்பட எடுத்துச் செல்லப்பட வேண்டிய பகுதியாகவும் வயிறு இருப்பதால், வயிற்றை நாம் பேணிக்காக்க வேண்டிய நிர்பந்தத்திலிருக்கிறோம். உங்களுக்கு சரியாகச் சீரணமாகவில்லை, மலச்சிக்கலுமிருக்கிறது,  மூலம் ஆரம்ப நிலையில் உள்ளது. இதன் மூலம் நாம்   அறிவது, உங்களுக்கு வயிற்றில் அமிலச் சுரப்பு குறைந்துள்ளது; குடலில் ஏற்படும் தன்னிச்சையான அசைவுகள் மந்தமாகிவிட்டன; ஆசனவாயில் அழுத்தம் ஏற்பட்டு சதை பிதுங்கியுள்ளது. இவை அனைத்தையும் ஒருசேர குணப்படுத்தும் வகையில் உணவும், மருந்தும் அமைந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

காலையில் 5 மணிக்கு எழுந்து சுமார் 300 மி.லி. தண்ணீர், வெந்நீராகவோ அல்லது ஆறிய வெந்நீராகவோ பருகவும். காலையில் 7 மணிக்கு இரண்டு பூவன் வாழைப்பழம் உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு 300 மி.லி. காய்ச்சியப் பால் இளஞ்சூடாகக் குடிக்கவும். காப்பி சாப்பிட்டுப் பழகியவர் என்றால் பாலில் சிறிது காபி கலந்து கொள்ளலாம். காலையில் இட்லி, தோசை போன்ற மாவுப் பணியாரம் தவிர்த்து சூடான புழுங்கலரிசி சாதத்துடன் நெய் கலந்து பச்சைக்கறி காய்கள் பருப்பு ரசம், விளாவிய மோர் என்ற வகையில் சாப்பிடலாம். தயிர் நல்லதல்ல. மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிடுபவராக இருந்தால் காலையில் 11 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, தக்காளி, அத்திப்பழம், ஆப்பிள் பழம் இவற்றில் கிடைத்தவற்றைச் சாறு பிழிந்தோ அப்படியேவோ சாப்பிடவும். இரவு 8 - 9 மணிக்கு சாப்பிடும் நிலையில், மாலையில் ஐந்து மணிக்கு சுமார் 300 மி.லி. வெது வெதுப்பான பால் சாப்பிடவும். இரவு உணவில் புளி - புளிப்பு சேர்ந்த உணவுப் பொருள் இல்லாதபடி பச்சைக்கறிகாய் சேர்த்து (வேக வைத்து) கூட்டு, சாதம், விளாவிய மோர் சாதம் சாப்பிடவும். சாப்பிடும் பொழுதும் தனியாகவும், நீர் சிறிய அளவில் ஆனால் அடிக்கடி குடிக்கவும். கடைசியில் இரவு படுக்கும் முன்பு வெந்நீர் 300 மி.லி. குடிக்கவும்.

மேற்குறிப்பிட்ட உணவு முறைகளில் முன்னும் பின்னும் இடையேயும் மருந்துகளை நுழைத்துச் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்னைகளை விரைவாகக் குணப்படுத்த முடியும். அந்த வகையில் - சுத்தமான பால் பெருங்காயம் 1 கிராம், இந்துப்பு 3 கிராம், ஆமணக்கெண்ணெய் 9 மி.லி., உள்ளிப்பூண்டு சாறு 27 மி.லி. என்ற அளவு முறையில் தேவைக்குத் தகுந்தபடி அதிக அளவிலும் ஒன்று சேர்த்துக் குலுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளில் 2-3 வேளை, ஒரு வேளைக்கு 15 மி.லி. வீதம் 15 மி.லி. பால் அல்லது வெந்நீர் கலந்து சாப்பிடவும். உணவிற்கு ணீ மணி நேரம் முன் ஹிங்க்வஷ்டகம் சூரணம் எனும் அஷ்ட சூரணம் தரமாகக் கிடைக்கிறது. ஒரு வேளைக்கு 2 கிராம். உணவு சாப்பிடும் பொழுது முதலில் இரண்டுவாய் சாதத்தில் சூரணமும் நெய்யும் சதும்பச் சேர்த்து சாப்பிட்டு, பிறகு மற்ற உணவுகளைச் சாப்பிடவும் ஒரு நாளில் இருவேளை மட்டும்.

சுமார் அரைலிட்டர் புளித்த தயிரைக் கடைந்த கெட்டிமோரில் விதை நீக்கிய கடக்காய்கள் 30, இந்துப்பு 20 கிராம் 3-4 நாட்கள் வெய்யிலில் ஊறவைத்து, பிறகு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். உணவிற்குப் பிறகு ஒரு கடுக்காய் வாயில் அடக்கிச் சாப்பிடவும். காலை இரவு 2 வேளை இந்த மூன்று மருந்துகளையும் உபயோகித்துக் கொண்டு பத்தியமாய் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உங்கள் வயிற்றுப் பிரச்னைகள் தீருவதுடன், ஊட்டம் குடல் வழியாக உடலில் மற்ற பகுதிகளுக்கு விரைவாகக் கிடைப்பதால், தோல் சுருக்கம் நீங்கும், அலுவலகத்தில் தூங்கிவழியும் நிலை, இடுப்பில் ஏற்பட்ட கனம், வலி ஆகியவை நன்கு குறைந்துவிடும். உடல் உஷ்ணம் தவிர்க்க சூரத்தாவாரையின் உலர்ந்த காய்கள் 5 - 15. சுத்தமான தண்ணீர் அல்லது உலர் திராட்சைப் பழச்சாறில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரைத் தனியாகவோ, பால் கலந்தோ 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட, நீர்ப் பேதியாகி பித்தம் வெளியேறிவிடும். உடற்சூடு நன்றாகக் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com