டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு:​ இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு

சென்னை, பிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகள் முடிந்து விட்டன. எனினும் அத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் நடைபெறாதத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:06 am

வி.தேவதாசன்

சென்னை, பிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகள் முடிந்து விட்டன.

எனினும் அத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் நடைபெறாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1807}ம் ஆண்டு மைசூர் மற்றும் மெட்ராஸ் மாகாண அரசுகளுக்கு இடையே தொடங்கிய காவிரி பிரச்னை, 200 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது. தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு இடையில் 40}க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, வேறு வழியின்றி இப்பிரச்னை குறித்து ஆராய 1990}ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1991}ல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நடுவர் மன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

இறுதித் தீர்ப்பு: நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 17 ஆண்டுகளுக்குப் பிறகு 5.2.2007 அன்று வெளியானது. அதில் காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி. என்றும், கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. என்றும் தீர்ப்பளித்தது.

தமிழகத்தின் பங்கில் 192 டி.எம்.சி.யை கர்நாடகம் வழங்க வேண்டும்; மீதியை தமிழகத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் பெய்யும் மழையைக் கொண்டு பெற வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழகத்துக்கு ஆறுதல்: காவிரியின் மொத்த நீர் அளவான 740 டி.எம்.சி.யில் 562 டி.எம்.சி. வேண்டும் என நடுவர் மன்றத்தில் தமிழகம் வாதாடியது. எனினும், தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. என்ற தீர்ப்பும், கர்நாடகம் 192 டி.எம்.சி. தர வேண்டும் என்ற உத்தரவும் தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலைத் தந்தது.

தீர்ப்பு குறித்து அப்போது கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி கூட, "தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது. தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு நியாயம் கிடைத்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

"இறுதித் தீர்ப்பின் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

மேல் முறையீடு: தீர்ப்பை முதல்வர் கருணாநிதி வரவேற்ற போதிலும், அரசியல் ரீதியான நிர்பந்தங்கள் காரணமாக, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் காவிரி நடுவர் மன்றத்திலும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல் கர்நாடக, கேரள அரசுகளும் மனு செய்தன. இந்த மனுக்களை 2007 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. எனினும் அதன் பிறகு இது தொடர்பான எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், காவிரி நடுவர் மன்றமும் மறு ஆய்வு மனுக்களை விசாரிக்க மறுத்து விட்டது.

விவசாயிகள் கவலை

இவ்வாறு மேல் முறையீட்டு மனுக்கள் கிடப்பில் உள்ளதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:

அரசியல் ரீதியான தீர்வும் கிடைக்கவில்லை; சட்ட ரீதியாகக் கிடைத்த தீர்வும் அமல்படுத்தப்படுமா எனத் தெரியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் காவிரி பிரச்னைக்கு முடிவே ஏற்படாமல் போய்விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னையின் அவசியம் கருதி உச்ச நீதிமன்றம்தான் உடனடியாக ஒரு முடிவெடுக்க வேண்டும். 3 மாநில அரசுகளின் மனுக்களை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இல்லையெனில், காவிரி நடுவர் மன்றத்துக்கே சென்று, அங்கு தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களின் மீது தீர்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பசவராஜ் கூறியதாவது:

காவிரி பிரச்னையில் தீர்வு காண்பதற்கான அரசியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எனினும், இரு மாநில விவசாயிகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால்தான் உண்மையிலேயே தீர்வு காண முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

எனவே இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த முக்கியமான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய "காவிரி குடும்பம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி பேசி வருகிறோம். பல சுற்று பேச்சுகளுக்குப் பின் இப்போது இறுதித் தீர்வை நெருங்கியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.