தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
""குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ள நரேந்திர மோடியின் செயல்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட ஆச்சரியத்துடன் பார்க்கின்றன'' என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் கட்சியின் புதிய தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல. கணேசன், லலிதா குமாரமங்கலம், சி.பி. ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாநில பொதுச்செயலர் எஸ். மோகன் ராஜுலு, வி. ரமேஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாஜக உறுப்பினர் சேர்ப்பு, மாநில அளவில் கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியினரை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மோடிக்கு வரவேற்பு: முன்னதாக, தேசிய செயற்குழுவில் பங்கேற்க வருகை தந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நிகழ்ச்சி அரங்கில் பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரைப் பாராட்டி செயற்கு கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியது:
நரேந்திர மோடியின் ஆட்சி அனைத்து தரப்பினரையும் பிரமிக்க வைக்கிறது. பாஜக ஆளும் மாநில முதல்வர்களில், பல மடங்கு திறமைவாய்ந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் அவர் அளித்து வருகிறார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்தது மட்டுமின்றி பெரும்பான்மை பலத்துடன் மாநிலத்தில் அவரது தலைமை வெற்றி பெற்றுள்ளது.
மோடிக்கு எதிராக பல சர்ச்சைகளை சிலர் கட்டவிழ்த்து விட்டபோதும் அதையெல்லாம் முறியடித்து அவர் வெற்றி பெற்று வருகிறார் என்றார்.
அதைத் தொடர்ந்து, பாஜக தலைவராக நிதின் கட்கரி தேர்வு செய்யப்பட்டபோது அவரது தொழில் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனை, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியது, திடீரென பாஜக அகில இந்திய தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டது போன்ற முன்னேற்றங்கள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கினார்.
தேசிய கவுன்சில் கூட்டம்: கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "தேசிய செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மத்திய-மாநில பாஜக தலைமை, நிர்வாகிகள் உள்ளிட்ட 2,200 பேர் கலந்து கொள்வர்.
மாநில வாரியான அரசியல் நிலவரம், சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் உத்திகள் குறித்து மாநில தலைவர்களுடனும் நிர்வாகிகளுடனும் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தும்' என்றார்.
பிரதமர் வேட்பாளர் யார்? "பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பாஜக மேலிடம் நிறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இது தொடர்பான விளக்கத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பல முறை தெளிவுபடுத்தி விட்டார். பாஜக ஆட்சிமன்றக் குழு உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்பதே எங்களின் பதில்' என்றார் ரவிசங்கர் பிரசாத்.
21-ம் நூற்றாண்டு பாஜக வசம்
மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
20-ம் நூற்றாண்டு காங்கிரஸ்வசம் இருந்தது போகட்டும்; 21-வது நூற்றாண்டு பாஜக வசம் வரட்டும்.
2013-14 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த பட்ஜெட்டால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்களுக்கு இருந்த சிறிதளவு நம்பிக்கையும் போய்விட்டது.
தவறான ஆளுகை, ஊழல் நிர்வாகம், பொறுப்பற்ற பொருளாதார மேலாண்மை போன்றவற்றால் இந்தியாவின் நற்பெயருக்கு உலக அரங்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. அதனால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கிறது என்றார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, ""புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜ்நாத் சிங்குக்கு எப்போதும் போல, பக்கபலமாக இருப்பேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

