சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சுரங்க ஊழல்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட  பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சரண்

ஓபுலாபுரம் சுரங்க நிறுவன ஊழல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீலட்சுமி

Updated On :22 மார்ச் 2013, 2:25 am IST

ஓபுலாபுரம் சுரங்க நிறுவன ஊழல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீலட்சுமி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் (ஓ.எம்.சி) விதிமுறைகளை மீறி நிலக்கரி வெட்டி எடுத்து, ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்தது. இவ்வழக்கில் ஜனார்த்தன ரெட்டி ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒய்.ஸ்ரீலட்சுமி மீது குற்றம்சாட்டப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி 2011, நவம்பர் 28-ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலராக பதவி வகித்து வந்த அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், கடந்தாண்டு மார்ச் 30-ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூட்டு சதிகாரர் என்று ஸ்ரீலட்சுமியின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவக் காரணங்களுக்காக ஸ்ரீலட்சுமிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டது. அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்ததையொட்டி, ஹைதராபாதில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை சரணடைந்தார்.

அவரை மார்ச் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சஞ்சல்குடா பெண்கள் சிறையில் ஸ்ரீலட்சுமி அடைக்கப்பட்டார்.

முன்னதாக, ஸ்ரீலட்சுமியின் வழக்குரைஞர் வாதிடுகையில், ஸ்ரீலட்சுமி இன்னும் சிறிது காலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டி இருப்பதால், அவருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவில், மத்திய சிறை நிர்வாகம் ஸ்ரீலட்சுமியை ஹைதராபாதில் உள்ள உஸ்மானியா புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை மார்ச் 25-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, ஜாமீனை நீட்டிப்பதா அல்லது ரத்து செய்வதால் என முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.