சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தேர்தல் நிதி அளிக்க அறக்கட்டளை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை

தேர்தல் நிதிக்கு அறக்கட்டளை அமைக்குமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

Updated On :21 ஜூலை 2013, 5:07 pm

தேர்தல் நிதிக்கு அறக்கட்டளை அமைக்குமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்குப் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிதி அளிக்கின்றன. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த அறக்கட்டளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதற்கான அறிவிக்கையை இந்த ஆண்டில் அரசு வெளியிட்டது. இதன்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளைகளை உருவாக்க வேண்டும்.

அவற்றைப் பதிவு செய்து அவற்றின் மூலம் தாங்கள் அளிக்க விரும்பும் நிதியை அரசியல் கட்சிகளுக்கு அளிக்க இந்தப் புதிய திட்டம் வழிவகுக்கிறது.

இதன்படி, ஒரு குழுமமானது தனது பெயருடன் "தேர்தல் அறக்கட்டளை' (எலக்டோரல் டிரஸ்ட்) என்ற வார்த்தையைச் சேர்ந்து அறக்கட்டளையை உருவாக்க வேண்டும். அக்குழுமம் தனது மற்ற நிறுவனங்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம், நிறுவனங்களின் பெயர்கள் தொடர்பான நெறிமுறைகளை மாற்றியுள்ளது.

அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "1956ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற நிறுவனங்கள் தேர்தல் நிதிக்கு அறக்கட்டளைகள் துவங்க தங்கள் நிறுவனப் பெயருடன் எலக்டோரல் டிரஸ்ட் என்ற வார்த்தையைச் சேர்த்து, புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

இதற்கான அறிவிக்கையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் வெளியிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் அமைத்த அறக்கட்டளைகள் மூலம் திரட்டும் நிதியில் 95 சதவீதத்தை அதே நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கினால் மட்டுமே, அத்தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். இது தவிர, இந்த நிறுவனங்கள் தங்கள் அறக்கட்டளைகளுக்காக, பணமாக நிதியை வசூலிக்கக் கூடாது. அவை, நிதி தரும் இந்தியர்களிடம் இருந்து நிரந்தரக் கணக்கு எண்ணையும் (பான்), வெளிநாட்டு இந்தியர்களின் பாஸ்போர்ட் எண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் இந்த அறக்கட்டளைகள் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற அனுமதிக்கப்படாது.

கடந்த காலத்தில், டாடா, ஆதித்ய பிர்லா குழுமம், பார்தி குழுமம் உள்ளிட்ட வர்த்தகக் குழுமங்கள் தங்களின் அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு கட்சிகளுக்கு நிதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

எனினும் இதுபோன்ற நிதி அளிப்பு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போனதால்தான் அரசு இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் காரணமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.