மருத்துவமனையில் சேர்ப்பதில் போலீஸார் தாமதம் செய்தனர்

தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது நண்பரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் போலீஸார் தேவையற்ற தாமதம் செய்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
Updated on
1 min read

தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது நண்பரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் போலீஸார் தேவையற்ற தாமதம் செய்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் நண்பரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பிய தொலைக்காட்சி மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸாரின் இத்தகைய அணுகுமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்.

மேற்கண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் போலீஸார் தேவையற்ற தாமதம் செய்தனர். அவர்கள் சாலையில் அரைகுறை ஆடடையுடன் விழுந்து கிடந்தனர். அப்போது அந்தப் பகுதி, எந்தக் காவல் நிலைய சரகத்தின் கீழ் வருகிறது என்றும், அவர்களை யார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்றும் மூன்று வேன்களில் வந்த போலீஸாரும் சுமார் 25 நிமிடங்களுக்கு வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

ஜேத்மலானி விமர்சனம்: பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பி. ராம் ஜேத்மலானி கூறுகையில், ""இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, குறைபாடுகளுக்கு யார் காரணம் என்று கண்டறிவதற்கு தில்லி காவல்துறை ஆணையர் நீரஜ்குமார் முயற்சி செய்யவில்லை. அவர் அந்த முயற்சியை எடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மாணவியின் நண்பரான காயமடைந்த நபர் கூறுவதையே நாம் நம்ப வேண்டும். அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும். இதில், போலீஸார் முற்றிலும் நம்பத்தகாதவர்கள்'' என்றார்.

ஷிண்டே பதிலளிக்க மறுப்பு: இதனிடையே, தில்லி போலீஸ் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவிடம் தில்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ""இந்த விவகாரம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இது தொடர்பாக விரிவான அறிக்கை கிடைத்த பின் கருத்து தெரிவிப்பேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com