தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

சுரங்க ஊழல் விசாரணை நியாயமாக நடக்க மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்க வேண்டுமெனில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 மே 2013, 12:58 am IST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்க வேண்டுமெனில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

அதிகளவு ஊழல் நிறைந்த அரசாக மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திகழ்கிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியது:

பிரதமரின் பொருளாதார உத்திகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அது எந்த வகையிலும் பயன்படவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். குறிப்பாக இப்போது நடந்துள்ள நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் அவருக்குள்ள தொடர்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்கள் 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுக்குள்பட்ட காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. இறுதி ஒப்புதலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் கையெழுத்து உள்ளது. 1700 கோடி டன் நிலக்கரி வளங்கள் 140 தனியார் நிறுவனங்களுக்கு இல

வசமாக தாரை வார்க்கப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் கோடியாகும். எனவே பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வழிவகுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ""உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அதில் பிரதமர் அலுவலகம் திருத்தங்கள் செய்துள்ளது. இதை சட்ட அமைச்சரும், சுரங்கத்துறை அமைச்சரும் செய்துள்ளன.

இத்தகைய செயல் இதற்கு முன்பு எப்போதுமே நடந்ததில்லை; கேள்விப்பட்டதும் கிடையாது. ஆனால் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கூறுவது வினோதமாக உள்ளது. அவர் செய்தது சிறிய தவறு கிடையாது. சிபிஐ மேற்கொண்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு திருத்தம் செய்தது, நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கிடுவதாகும். இந்த வகையில் இருவிதமான தவறுகளை அஸ்வனிகுமார் செய்துள்ளார்,'' என்று ஜவடேகர் சுட்டிக்காட்டினார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் ராஜிநாமா செய்ததுடன் அந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. அவர் மீதான சிபிஐ குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நீதிமன்ற மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து நிலைகளிலும் ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மிக தகுதியை இழந்துவிட்டது. நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜவடேகர் கூறினார்.

''உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு அதில் திருத்தம் செய்யப்பட்டதில் பிரதமருக்கு முழு பொறுப்பு உள்ளது. இதை செயல்படுத்தியது சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார். நடந்த தவறுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும்,'' என்று பாஜக பொதுச் செயலர் தர்மேந்தர் பிரதான் தெரிவித்துள்ளார்.

""நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங்தான்,'' என்று பிகார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி கூறினார். சமீபத்தில் இந்தியப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதற்கு, உரிய பதிலடி தர மன்மோகன் சிங் தவறிவிட்டார். நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என்பதையும், வலுவில்லாத பிரதமர் நாட்டை ஆள்கிறார் என்பதையுமே இதுகாட்டுகிறது என்று மோடி சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.