இணையவழி போர்

அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் மீதான இணையதளத் தாக்குதலுக்குப் பின்னர், இணையவழி
இணையவழி போர்
Updated on
3 min read

அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் மீதான இணையதளத் தாக்குதலுக்குப் பின்னர், இணையவழி குற்றங்கள் குறித்த உலகளாவிய பார்வையே மாறியுள்ளது.

இதை ஒரு புதிய போர்க்களமாகப் பார்க்கிறார்கள் நிபுணர்கள்.

தொழில்நுட்பம் வளர வளர உலக நாடுகளின் போர் முறையும் அவ்வப்போது மாறி வருகிறது. இருந்த இடத்திலிருந்தே ஏவுகணைத் தாக்குதல், ஆளில்லா விமானத் தாக்குதல் என தாக்குதல் வியூகம் முன்னேற்றமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதிதான் "சைபர்' தாக்குதல். இணையதளம் மூலம் குறிப்பிட்ட இணையதள வலைப்பின்னலில் ஊடுருவி தகவல்களை அழித்தல் அல்லது கணினி வழியாகச் செயல்படுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துதலே "சைபர்' தாக்குதல்.

ஏவுகணையைப்போல நாடுவிட்டு நாடு பாயும் இந்த இணையவழித் தாக்குதலால் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீதான  தாக்குதல், அனைத்து நாடுகளையுமே ஒரு கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தாக்குதல் ஏன்?

"தி இன்டர்வியூ' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்தது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். வடகொரிய அதிபர் கிம் ஜோங்

உன்-ஐ இரண்டு பேர் பேட்டி எடுக்கச் செல்வதுபோல நடித்து கொலை செய்வதுதான் இந்தப் படத்தின் கதை. நகைச்சுவை கலந்த திரில்லர் வகைப் படமான இதில், வடகொரிய அதிபரை கேலி செய்தும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸ்  தினத்தில் இப்படத்தை திரையிடப்போவதாக சோனி பிக்சர்ஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதள வலைப்பின்னலுக்குள் புகுந்து, அந்த நிறுவனம் தொடர்பான ரகசியத் தகவல்கள், பணியாளர்களின் சம்பளம் உள்பட பலவற்றைத் திருடி சுட்டுரையில் வெளியிட்டனர் ஹேக்கர்கள் (இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர்). இதையும் மீறி திரைப்படத்தை வெளியிட்டால், திரையரங்குகளின் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் விடுத்தனர். முதலில் இதைப் பார்த்து பயந்துபோன சோனி பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என அறிவித்தது. பின்னர், அமெரிக்க அரசின் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்று, குறிப்பிட்ட திரையரங்குகளிலும், இணையதளத்திலும் வெளியிட்டது.

இந்த இணையவழித் தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம் என எஃப்பிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. பிரத்யேகமாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய அதிபர் ஒபாமா, இத்தாக்குதல் அமெரிக்கா மீதான சைபர் வன்முறை எனவும், இதற்கு உரிய நேரத்தில் பதிலடி தரப்படும் எனவும் எச்சரித்தார். ஒபாமா இதை இணையவழி வன்முறை என்று குறிப்பிட்டாலும், இது அமெரிக்கா மீதான இணையவழிப் போர் என்று கூறினர் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை முன்னாள் உறுப்பினர் நியூட் கிங்ரிச்சும், செனட்டர் ஜான் மெக்கெய்னும்.

ஆனால், வடகொரியா இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. எந்த வகை இணையவழித் தாக்குதலையும் கண்டித்துள்ள சீனா, இப்பிரச்னையில் வடகொரியாவின் பங்கை அமெரிக்கா நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, வடகொரியாவின் பக்கம் இருக்கிறது. ரஷியாவும் வடகொரியாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.

வடகொரியாவால் முடியுமா?

அமெரிக்காவில் இணையதள ஊடுருவல் தாக்குதலை நடத்தும் அளவுக்கு வடகொரியா வலிமை பெற்றுள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், வடகொரியாவின் இணையதளக் கட்டமைப்பு அத்தனை பலமானது அல்ல. அந்த இணையதளச் சேவை மற்றும் பராமரிப்பையும்கூட சீனாவின் யுனிகாம் நிறுவனம்தான் வழங்கி வருகிறது என்பதால், வடகொரிய எல்லையையொட்டியுள்ள சீன நகரப் பகுதிகளிலிருந்து இந்த ஹேக்கர்கள் செயல்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சந்தேகத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் தாக்குதல் நிகழ்ந்த சில தினங்களில் தென்கொரியாவின் "கொரியா நீர் மற்றும் அணுமின் கழக' நிறுவனத்தின் இணையதளத்துக்குள் புகுந்த ஹேக்கர்கள், சில அணுஉலைகளின் புளூபிரின்ட் மற்றும் சில தகவல்களைத் திருடி, சுட்டுரையில் வெளியிட்டனர். சில குறிப்பிட்ட அணுஉலைகளை மூட வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தனர். இந்த ஹேக்கர்களின் ஐ.பி. (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரியை ஆய்வு செய்தபோது, வடகொரியாவின் எல்லையோரமாக உள்ள சீனாவின் ஷென்யாங் நகரத்திலிருந்து ஹேக்கர்கள் செயல்பட்டது தெரியவந்தது. ஆதலால், இதிலும் வடகொரியாவின் பின்னணி சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை.

புதிதில்லை

இணையதள ஊடுருவல் என்பது ஒன்றும் புதிதில்லை. கணினிவழியாகக் கட்டுப்படுத்தப்படும் தொழிலக இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் "ஸ்டக்ஸ்நெட்' என்ற புரோகிராம், கடந்த 2010ஆம் ஆண்டு ஈரானின் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்களைச் செயலிழக்கச் செய்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துதான் அந்த "ஸ்டக்ஸ்நெட்' புரோகிராம்களை உருவாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. ஆனால், அதை அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு முன்னரே, ஜார்ஜியாவுடனான பகை காரணமாக 2008இல் அந்த நாட்டின் வங்கிகள், அரசு நிறுவன இணையதளங்களை ரஷியா முடக்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதை ரஷியாவும் ஒப்புக்கொள்ளவில்லை.

இதேபோல, 2012ஆம் ஆண்டின் மத்தியில் அமெரிக்காவின் முன்னணி வங்கி இணையதளங்களில் ஊடுருவல் தாக்குதல் நிகழ்ந்தது. இதில் ஈரானுக்கு தொடர்பிருக்கலாம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால், ஈரான் மறுத்தது.

ஆபத்தான போர்

மரபுவழி போரைப் போலன்றி, கத்தியின்றி ரத்தமன்றி நடத்தப்படும் இணையவழித் தாக்குதல் மிக அபாயகரமானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா, வடகொரியா என்றில்லை, எந்த நாடும் செய்ய முடியும் என்பதால், இதில் யார் வல்லவன் என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லை. ""அமெரிக்காவில் பிரதான இணையவழித் தாக்குதல் இலக்கு என்பது மின்கட்டமைப்பாகத்தான் இருக்கிறது'' என்கிறார் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தலைவரும், சைபர் பிரிவு தலைவருமான மைக்கேல் ரோஜர்ஸ். இதுபோல் மின் கட்டமைப்பு இணையவழித் தாக்குதல் மூலம் சீர்குலைக்கப்பட்டால், நாட்டின் ஒட்டுமொத்த இயக்கமுமே ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும். இதில் உள்ள அபாயங்கள் அத்தனையும் தெரிந்தும், இணையவழித் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுதான் யதார்த்தமான நிலை.

இந்தியா தயாரா?
""மரபுவழியிலான முழுமையான போர் என்பது அரிதானது; ஆதலால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இணையவழித் தாக்குதல் அபாயத்தையும் மனதில்கொண்டே அவர் இதைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான், சீனாவை தளமாகக் கொண்டு செயல்படும் ஹேக்கர்கள் இந்திய இணையதளங்களில், கணினி கட்டமைப்புகளில் ஊடுருவியுள்ள சம்பவம் பலமுறை நிகழ்ந்துள்ளது. 2012ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குப் பிராந்திய கடற்படை தலைமையகத்தில் கணினி வலைப்பின்னலில் சீன ஹேக்கர்கள் ஊடுருவினர். 2013இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கணினி வலைப்பின்னலிலும் சீன ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் நிகழ்ந்தது. இந்தியாவில் இணையவழித் குற்றங்களை விசாரிக்கும் தனி குற்றப்பிரிவு மாநிலக் காவல் துறைகளில் இருந்தாலும், ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு இணையாக தேசிய அளவிலான தனிப் பிரிவு இல்லை. இதுபோன்ற ஒருங்கிணைந்த இணைய பாதுகாப்புப் பிரிவைத் தொடங்குவது குறித்த ஒரு வரைவுத் திட்டம் ஓராண்டுக்கு முன்னரே தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.அண்மையில்தான் இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதற்கான 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சைபர் குற்றங்களை திறமையாக எதிர்கொள்ளுதல், இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவது போன்றவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து ஒரு வரையறையை வகுக்கும்.

சோனி பிக்சர்ஸ் மீதான தாக்குதலை இணையவழி வன்முறை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டாலும், இது அமெரிக்கா மீதான இணையவழி போர் என்று கூறினர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை முன்னாள் உறுப்பினர் நியூட் கிங்ரிச்சும், செனட்டர் ஜான் மெக்கெய்னும்.

தன் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்தது. எந்த வகை இணையவழித் தாக்குதலையும் கண்டித்துள்ள சீனா, இப்பிரச்னையில் வடகொரியாவின் பங்கை அமெரிக்கா நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, வடகொரியாவின் பக்கம் இருக்கிறது. ரஷியாவும் வடகொரியாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com