/

புதுவையில் அனுமதியின்றி வீடுகளை விடுதிகளாக நடத்துவோர் மீது நடவடிக்கை:அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவு

புதுச்சேரியில் அரசு அனுமதியின்றி வீடுகளை விடுதிகளா நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்

News image
Updated On :13 ஜூன் 2014, 11:37 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் அரசு அனுமதியின்றி வீடுகளை விடுதிகளா நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர் செல்வம் உத்தரவிட்டார்.

புதுச்சேரியின் பெரிய மார்க்கெட்டான குபேர் மார்க்கெட் பகுதியை அமைச்சர் பன்னீர்செல்வம், அரசுக் கொறடா ஜி.நேரு ஆகியோர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மார்க்கெட்டில் பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதைகளை அகலப்படுத்த உத்தரவிடப்பட்டது. அடிக்காசு என்ற பெயரில் தேவைக்கு அதிகமான இடங்களை பிடித்துக் கொள்வதும், கடைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தேவையற்ற பொருள்களை அடுக்கி வைத்தும், நடைபாதையில் பொருள்களை பரப்பி வைத்திருந்த வியாபாரிகளை சீரமைக்குமாறு எச்சரிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி கடைகளை வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.மேலும் மீன் அங்காடிகளுக்கு கொண்டு வரப்படும் மீன்களை காந்தி வீதியிலேயே கொட்டி ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

மார்க்கெட்டின் தென்புறத்தில் குப்பைகள் குவியாமல் இருக்க அவ்வப்போது துப்புரவு பணிகளை செய்ய வேண்டும், கோழிக்கழிவுகளை வீசி எறிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பினனர் ஜனாப் காசிம் சின்ன மார்க்கெட்டையும், பார்வையிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் மார்க்கெட் சுத்தமாக பராமரிக்கப்படுவதற்கு அதிகாரிகளைப் பாராட்டினார்.

அரசு அனுமதி, உரிமம் இன்றி வீடுகளை விடுதிகளாக நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்த அமைச்சர் பின்னர் ஆட்டுப்பட்டில் உள்ள ஆடு, மாடுகள் வெட்டும் கிடங்கை பார்வையிட்டு மத்திய அரசு நிதியுதவியுடன் அது மேம்படுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.