ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டன.
புல்வாமா பகுதியிலுள்ள அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சிலரைக் கைது செய்வதற்காக போலீஸாரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றனர். அப்போது, மாணவர்கள் சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தினர். இதில், சில மாணவர்கள் காயமடைந்தனர்.
இதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், காவலர்கள் 5 பேரும் காயமடைந்தனர்.
இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரிலுள்ள கல்லூரிகளை வெள்ளிக்கிழமை வரை மூடுமாறு கோட்ட ஆணையர் பஷீர் கான் உத்தரவிட்டுள்ளார். எனினும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை வகுப்புகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.