தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு! 

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2017, 6:57 am

புதுதில்லி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், கடந்த 2006-ஆம் ஆண்டில் மும்பையில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது. தொழிலதிபர் பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

அப்போது மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மோரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஃப்ஐபிபி) இருந்து சட்ட விரோதமாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாகவும், அந்த நிறுவனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த மே 15-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோரின் மும்பை, தில்லி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

பின்னர், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக ஜூன் 15-ஆம் தேதி அழைப்பாணைஅனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த மனு, மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை 'கண்காணிக்கப்படும் நபர்' என அறிவித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் அதை ரத்து செய்யக்கோரியும் அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரும் இதேபோன்று மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.துரைசாமி முன் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், மத்திய அரசின் சுற்றறிக்கை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். என்ன காரணங்களுக்காக 'கண்காணிக்கப்படும் நபர்' என அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கம் சுற்றறிக்கையில் இல்லை. இது குறித்து கேட்டும் உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் சட்ட நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மேலும் ஒரு மனு கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுக்கள் நீதிபதி எம்.துரைசாமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சுப்பிரமணியம், சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டனர்.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் உள்பட மூவருக்கு எதிராக 'கண்காணிக்கப்படும் நபர்' என்று அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இம்மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் தற்பொழுது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.