மதுக்கடை தடை விவகாரம்: நெடுஞ்சாலைகளை மறு வகைப்படுத்துவது தவறல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என வகைப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என வகைப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் மேற்குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளின் அருகே செயல்படும் மதுக்கடைகளை மூட வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் கருதப்படுகிறது.
நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், தமது முந்தைய தீர்ப்பினில் சில திருத்தங்களை மேற்கொண்டது.
அதன்படி, 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளைப் பொருத்தவரை, அவற்றிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுக்கடைகளை மூடுவதைத் தவிர்ப்பதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் முயற்சியில் பெரும்பாலான மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், ஹரியாணா மாநிலத் தலைநகரான சண்டீகரிலும் இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக வகைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டீகரில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதைத் தடுக்கும் நோக்கத்திலேயே உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி பார்த்தால், நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் அங்கு வேகமாக செல்வது என்பது இயலாத காரியம். அதுபோன்ற நெடுஞ்சாலைகள்தான் மாவட்ட சாலைகளாக வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவேளை, நகரங்களில் வாகன நெரிசலற்ற நெடுஞ்சாலைகளை சுட்டிக்காட்டினால் அதுகுறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையானது வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...