"காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை திருத்த உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆகையால் அந்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்' என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.
கர்நாடக வாதம்: அப்போது, கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி முன்வைத்த வாதம்:
காவிரி வழக்கில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு சரியாகவே இருந்தாலும், அந்தத் தீர்ப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் கர்நாடகத்தின் கோரிக்கைகளை ஏற்று நடுவர் மன்றத் தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தின் வழக்கே ஒப்பந்தம் குறித்துதான் என்ற நிலையில், நடுவர் மன்றம் அளித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் 142-ஆவது பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றம் செய்ய வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் பாசனப் பயன்பாட்டுக்கான நீரின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும். தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், கோடைக் காலத்தில் தமிழகம் நெல் சாகுபடி செய்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் சார்பில் மற்றொரு வழக்குரைஞர் சரத் ஜாவ்லி ஆஜராகி முன்வைத்த வாதம்:
"நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட முன்பும், பின்பும் கர்நாடகத்துக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அப்போதைய மைசூர் அரசுக்கும், மதராஸ் அரசுக்கும் காவிரி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தான போது இரு மாநிலங்களிலும் அணைகள் கட்டப்படவில்லை. 44 டிஎம்சி கொள்ளளவு உடைய கிருஷ்ணராஜ சாகர் அணை கட்ட மைசூர் அரசு திட்டமிட்டது. அப்போது, மதராஸ் அரசு மேட்டூரில் 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்ட முடிவு செய்தது.
காவிரி ஒப்பந்தம் காலாவதியாகும் சூழலில் 1974-ஆம் ஆண்டு வரை மதராஸ் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருந்தது. பின்னர் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி உண்மை அறியும் குழுவை அமைத்தது. இது தொடர்பாக நடுவர் மன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு பாசனத் திட்டங்களுக்கான நிதிக்கு மத்திய அரசையும், திட்ட அனுமதிக்கு மத்திய நீர் ஆணையத்தையும் கர்நாடகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, காவிரிப் படுகையில் உள்ள பெங்களூருவின் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்கு மட்டுமே காவிரியிலிருந்து நீர் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணாஆற்றுப் படுகையில் இல்லாத சென்னைக்கு கால்வாய் மூலம் 5 டிஎம்சி நீர் குடிநீருக்கு பெறப்பட்டு வருகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றாக குடிநீர் உள்ள சூழலில் இந்த விவகாரத்தில் உள்ள நீதியையும், அநீதியையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று வாதிட்டார்.
கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞர் மோகன் கத்தார்கி, "காவிரி நடுவர் மன்றத்தில் கர்நாடகத்தின் வாதங்கள் தொடர்பாக குறுக்கு விசாரணை நடைபெறவில்லை. தமிழகம் சமர்ப்பித்த தகவல்கள் தவறானவை' என்றார்.
நீதிபதிகள் கருத்து: கர்நாடகத்தின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர், "நடுவர் மன்றம் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது. ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை கர்நாடகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். இந்த விசாரணைக்குத் தேவையான வாதங்களை மட்டும் முன்வையுங்கள். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அளிக்கப்படும் நீரில் எவ்வளவு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது? கடலில் எவ்வளவு நீர் கலக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாக உற்று நோக்க வேண்டியுள்ளது. சில புத்ததங்களையும், ஆவணங்களையும் மட்டும் படித்துவிட்டு முடிவுக்கு வருவதில் நம்பிக்கையில்லை' எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என்று மத்திய அரசு முறையிட்டது.
"இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உண்டு' என்று கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


