தில்லி ஜந்தர்-மந்தரில் கடந்த 15 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (உள்துறை), அருண் ஜேட்லி (நிதி), ராதா மோகன் சிங் (வேளாண்) ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இருந்தபோதிலும் 'இச்சந்திப்புகள் மனநிறைவை அளிக்கவில்லை என்பதால் போராட்டம் தொடரும்' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் சென்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர்.
அப்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, பயிர் காப்பீட்டுக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சந்தித்தனர்.
முதலாவதாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஜந்தர் மந்தருக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேசினர்.
புதுச்சேரி முதல்வர் ஆதரவு: இதேபோல, தில்லிக்கு அரசுமுறைப் பயணமாக வந்த புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து போராட்டக் குழுவினருடன் சாலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரை நாராயணசாமி சந்தித்து விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசினார்.
இதற்கிடையே, ஜந்தர் பகுதிக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை வந்து அய்யாக்கண்ணு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிற்பகலில் அய்யாக்கண்ணு குழுவினரை மத்திய உள்துறை, வேளாண் துறைகளின் அமைச்சர்களைச் சந்திக்க தம்பிதுரை அழைத்துச் சென்றார்.