நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் விவகாரத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட்டு முடிவெடுத்ததன் அடிப்படையிலேயே


கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் விவகாரத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட்டு முடிவெடுத்ததன் அடிப்படையிலேயே அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் விளக்கம் அளித்தார்.
தனது செயல்பாடு தொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி கர்ணனை கைது செய்யும்படி மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 9) உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னையில் இருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை தமிழகம் வந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆந்திர மாநிலம் சென்று விட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட கொல்கத்தா காவல்துறை தனிப்படை ஏமாற்றத்துடன் மீண்டும் சென்னை திரும்பியது.
இந்நிலையில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், விதிகளின்படி அவரது மனு தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி அதை ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் அலுவலகம் நிராகரித்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு "முத்தலாக்' விவகாரத்தை வெள்ளிக்கிழமை விசாரிக்கத் தொடங்கியபோது, நீதிபதி கர்ணன் சார்பில் வழக்குரைஞர் மாத்யூஸ் நெடும்பரா ஆஜரானார். "மே 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியது: தற்போது கூடியுள்ள நீதிபதிகள் அமர்வு வேறு விவகாரத்தை விசாரிப்பதற்காகக் கூடியுள்ளது. நீதிபதி கர்ணன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் முதன்மை அமர்வு (தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு) முன்பு ஆஜராகி மனுவை அளிக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறீர்கள். அதை நாங்களும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
நீதிபதி கர்ணன் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு மிகவும் கவனத்துடனேயே அதற்கான முடிவை ஏழு நீதிபதிகள் அமர்வும் எடுத்து உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவுக்கும் கட்டுப்படாமல் தடியை கையில் எடுத்துக் கொள்வது போல நீதிபதிகளுக்கு உத்தரவிடும் போக்கு இங்கு (உச்ச நீதிமன்றம்) ஒருபோதும் எடுபடாது என்றார்.
இதையடுத்து மேலும் முறையிடாமல் பின்வாங்கிக் கொண்ட வழக்குரைஞர் மாத்யூஸ், உணவு இடைவேளைக்கு முன்பாக, மீண்டும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் இடம்பெற்ற அமர்வு முன்பு ஆஜராகி, "நீதிபதி கர்ணனின் மனுவை விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி கேஹர், "உங்கள் மனுவை முறைப்படி நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யுங்கள். எங்களை நேரடியாக சந்தித்து மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரும் வழக்கத்தை கைவிடுங்கள்' என்று அறிவுறுத்தினார். இதையடுத்து தனது கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்காமல் நீதிமன்ற அறையில் இருந்து மாத்யூஸ் வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...