சியாச்சின் சிகரத்தின் அருகே அத்துமீறி பறந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்?
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சியாச்சின் மலை சிகரத்தையொட்டிய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சியாச்சின் மலை சிகரத்தையொட்டிய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் சியாச்சின் மலைச் சிகரம் அமைந்துள்ளது. உலகிலேயே மிக உயரமான போர்முனையாக கருதப்படும் இந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனினும், சியாச்சினை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று பாகிஸ்தானும் உரிமைக் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இந்த சியாச்சின் சிகரத்தையொட்டிய இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் புதன்கிழமை அதிகாலை அத்துமீறி பறந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், அத்துமீறல் நடைபெற்றதாகக் கூறப்படும் சமயத்தில், சியாச்சினையொட்டியுள்ள பாகிஸ்தானின் ஸ்கார்ட் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தை அந்நாட்டு விமானப் படைத் தலைமைத் தளபதி சொஹைல் அமன் பார்வையிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள், இந்திய எல்லைப் பகுதிகளில் வேகமாகப் பரவியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியா மறுப்பு
பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவத் தரப்பில், 'சியாச்சின் வான்பகுதியில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நௌஷேராவில் உள்ள அந்நாட்டு ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தானிடம் அத்துமீறலில் ஈடுபடும் நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு விமானப்படை தலைமைத் தளபதி சொஹைல் அமன் எச்சரித்துள்ளார்.
சியாச்சினையொட்டியுள்ள பாகிஸ்தானின் ஸ்கார்ட் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தை புதன்கிழமை பார்வையிட்ட சொஹைல் அமன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானிடம் எதிரிகள் (இந்தியாவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) அத்துமீறலில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். அந்த பதிலடியானது எதிரிகளின் சந்ததியினருக்கும் மறக்க முடியாத வகையில் அமைந்துவிடும் என்றார் அவர்.
புதிய விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்
இந்திய ராணுவ நிலைகள் தாக்கி அழிக்கப்படுவது போன்ற விடியோவை பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டது.
இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவி செய்து வந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், இதுதொடர்பான விடியோவையும் ராணுவம் வெளியிட்டது. இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்கி அழிப்பது போன்ற விடியோவை அந்நாட்டு ராணுவம் தமது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவுக்கு கீழே, 'இந்திய ராணுவம் கடந்த 13-ஆம் தேதி பாகிஸ்தான் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் அழித்தது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...