பிகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்தனர். பிகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைசாலி மாவட்டத்தில் உள்ள பசெளலி கிராமத்தைச் சேர்ந்த அருண் படேல்(50), தேவேந்திர பாஸ்வான்(45), லால்பாபு பாஸ்வான்(46) ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டனர். கள்ளச் சாராயம் குடித்த மற்றொருவர், கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மூவரின் மரணத்துக்கு கள்ளச் சாராயமே காரணம் என்று உள்ளூர் மக்களும், ஊராட்சித் தலைவரும் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே, உண்மையான காரணம் தெரியவரும் என்று மாவட்ட காவல் துறை எஸ்.பி. ராகேஷ் குமார் கூறினார்.
இதேபோல், ரோத்தாஸ் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்திய 4 பேர் கடந்த மாதம் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை அடுத்து, 8 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
6 பேர் கைது: இதனிடையே, சமஸ்திபூர் மாவட்டத்தில் லாரியில் மதுபானம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த லாரியில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த அளவு 4,000 லிட்டர் ஆகும். பஞ்சாப் மாநில பதிவெண்ணுடன் வந்த அந்த லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள், பிகாரில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
அந்த மதுபாட்டில்கள் யாவும், தர்பங்கா மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று ஹதோடி காவல் நிலைய பொறுப்பாளர் சுரேஷ் பிரசாத் யாதவ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.