அரசு மரியாதையுடன் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் உடல் அடக்கம்: முதல்வர் சித்தராமையா அஞ்சலி

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம்
மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடலுக்கு பெங்களூரில் புதன்கிழமை அஞ்சலி செலுத்துகிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடலுக்கு பெங்களூரில் புதன்கிழமை அஞ்சலி செலுத்துகிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
Published on
Updated on
2 min read

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட அரசியல் மூத்த தலைவர்கள், இலக்கியவாதிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கன்னட பத்திரிகையின் ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளருமான கெளரி லங்கேஷ், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்ட கெளரி லங்கேஷ், இரவு 7.56 மணிக்கு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் வந்துள்ளார். காரில் இருந்து இறங்கி வீட்டின் முகப்பு நுழைவு வாயிலைத் திறந்து வளாகத்தினுள் சென்றவர் கதவை மூடத் திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 
இதில் கெளரி லங்கேஷின் தோள்பட்டையின் இடது பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கெளரி லங்கேஷ், தப்பி வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, கால் இடறி கீழே விழுந்த கெளரி லங்கேஷை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் 7 சுற்று சுட்டுள்ளனர். இதில், இதயத்தில் 2 குண்டுகள் துளைத்ததால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 0.32 கைத்துப்பாக்கியால் கெளரி லங்கேஷ் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.
கண் தானம்: முன்னதாக, கெளரி லங்கேஷ் தனது கண்களைத் தானம் செய்ய ஒப்புதல் அளித்திருந்ததால், , மருத்துவர்கள் அவரது கண்களை அகற்றினர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது இளைய சகோதரர் இந்திரஜித் லங்கேஷ்,' கெளரி லங்கேஷின் இதயத்தில் குண்டு துளைத்துள்ளதால், அவர் சம்பவ இடத்திலே உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கெளரியின் விருப்பத்தின்படி அவரது கண்கள் இரண்டும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. கெளரியைக் கொன்ற கொலைகாரர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி: விக்டோரியா மருத்துவமனையில் இருந்து ஜே.சி.சாலையில் உள்ள ரவீந்திர கலாúக்ஷத்ராவுக்கு கெளரி லங்கேஷின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு கெளரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கெளரி லங்கேஷின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சித்தராமையா அஞ்சலி: மாலை 3.30 மணி அளவில் கெளரி லங்கேஷின் உடல் சாமராஜ் பேட்டில் டி.ஆர்.மில் அருகே உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. கெளரி லங்கேஷ் மதச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாதி என்பதால், எவ்வித மதச் சடங்குகளும் செய்யப்படவில்லை. 
அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் சித்தராமையா மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கெளரியின் தாய் இந்திரா, தங்கை கவிதா, தம்பி இந்திரஜித் உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் சித்தராமையா ஆறுதல் கூறினார். பின்னர், மாலை 4.30 மணி அளவில் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை குறித்து சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்ஐடி) விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விதான செளதாவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியது: புகழ்பெற்ற சிந்தனையாளரும், தலைச்சிறந்த பகுத்தறிவுவாதியும், மூத்த பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பதவியில் உள்ள அதிகாரியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 
இதற்கான குழுவை உடனடியாக அமைக்குமாறு டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு உத்தரவிட்டுள்ளேன். கெளரி லங்கேஷின் படுகொலை விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கெளரியின் சகோதரர் இந்திரஜித் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும், அவசியம் ஏற்பட்டால் சிபிஐ விசாரணைக்கு வழக்கை ஒப்படைக்க மாநில அரசுக்கு எவ்வித தடையும் இல்லை என்றார் சித்தராமையா. எஸ்ஐடி, டிஜிபி பி.கே.சிங் தலைமையில் அமைக்கப்படும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com