யார் இந்த கௌரி லங்கேஷ்? உண்மைகளை எழுதியதால் உயிரை இழந்த பெண் பத்திரிகையாளர்!

பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
யார் இந்த கௌரி லங்கேஷ்? உண்மைகளை எழுதியதால் உயிரை இழந்த பெண் பத்திரிகையாளர்!
Published on
Updated on
2 min read


பெங்களூர்: பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார்.

செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 

இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்.  இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.

1980ம் ஆண்டு ஆங்கில ஊடகத்தில் தனது பணியைத் தொடங்கிய கௌரி, 2000-ஆவது ஆண்டில் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். மேலும் கௌரி லங்கேஷ் பத்திரிகா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதிலும் வெற்றி கண்டார். இந்த நாள் வரை எந்த விளம்பரமும் இல்லாமல் வெறும் வாசகர்களின் கட்டணத்தைக் கொண்டே இந்த பத்திரிகை இயங்கி வருகிறது.

கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாதவர்
2000ஆவது ஆண்டில் கௌரி லங்கேஷ்கரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில், கொலை மிரட்டல்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, என் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து என்றுமே நான் பயம் கொண்டதில்லை. நான் நள்ளிரவு 3 மணிக்குக் கூட வீடு திரும்புவேன். ஒரே ஒரு நாள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சேலைக்கட்டிக் கொண்டு ஒரு ஆண் என்னை நடுரோட்டி வழிமறித்தார். அதைத் தவிர இதுவரை வேறு எந்த அச்சுறுத்தலையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் அதன் பிறகு, வீடு வரை என் கார் ஓட்டுநரை துணைக்கு அழைத்து வர ஆரம்பித்தேன். இது தவிர சில முறை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், என்னை மிரட்டுபவர்களிடம், உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன். என்னைப் பற்றி மோசமாக எழுத வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். அதற்கும் நான் கவலைப்பட மாட்டேன் என்றே பதிலளித்துள்ளேன் என்றார்.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவர்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கூறிய ஒரு கருத்து: இந்திய குடிமகனாக பாஜகவின் மதக் கொள்கைகளையும், மத ரீதியிலான அரசியலையும் எதிர்க்கிறேன். இந்து தர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், மத நடைமுறைகளையும் கண்டிக்கிறேன். இந்து தர்மம் என்ற பெயரில், நியாயமற்ற, நீதியற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார்.

டாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் பிறந்த நான், அம்பேத்கரைப் போலவே மத பாகுபாடுக்கு எதிராக போராடுவேன். ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், விமரிசிக்கும் சுதந்திரத்தை நான் முழுமையாக நம்புகிறேன். பாஜகவுக்கு எதிரானவர், மோடிக்கு எதிரானவர் என என்னை மக்கள் அழைப்பதையும் வரவேற்கிறேன். ஏன் என்றால், என்னுடைய கருத்துகளைக் கூற எனக்கு சுதந்திரம் இருப்பதுபோல, மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி கருத்துக் கூற சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தலித் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். நக்ஸலைட்டுகள் மனம் திருந்தி, மீண்டும் எளிய வாழ்க்கையை வாழ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com