இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம்

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 2:46 pm IST


ஜெய்ப்பூர்: அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மான் வேட்டையாடிய போது சல்மான் கானுடன் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டோரை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் தேவ் குமார் கத்ரி இன்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களான சல்மான் கான், சைஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் கன்கானி கிராமத்தின் அருகே 'ஹம் சாத் சாத் ஹே' என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் நடித்து வந்த சல்மான் கான், அக்டோபர் 1-ஆம் தேதி பின்னிரவில் 2 மான்களை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, இதர நடிகர், நடிகைகளும் உடனிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சல்மான்கான் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 51-இன் கீழும், இதர நடிகர், நடிகைகள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 51, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 149 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் 2007ம் ஆண்டு சல்மான் கான் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்றும், தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சல்மான் கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வந்தது.

சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை கடந்த மார்ச் 28ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.