இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக பிசிசிஐ அமைப்பை கொண்டுவர இயலுமா என்பது குறித்து பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2016 ஜூலையில் சட்ட ஆணையத்திடம் கேட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், தனது 124 பக்க அறிக்கையை புதன்கிழமை மத்திய சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் உறுப்பினர்களாக இருக்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் கொண்டு வரப்பட வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நிர்வாக அமைப்பாக பிசிசிஐ இருப்பதை கவனத்தில் கொள்ளாத காரணத்தால், அரசு கண்காணிப்பில் இருந்துகொண்டே, வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் இல்லாமல் அந்த அமைப்பு செயலாற்றி வருகிறது.
இந்தியாவில் ஓர் அங்கமாக இருக்கும் பிசிசிஐ, வரி விலக்கு மற்றும் நில ஒதுக்கீடு ஆகிய வடிவங்களில் அரசிடம் இருந்து போதிய நிதியுதவிகளைப் பெறுகிறது. பிசிசிஐயின் செயல்பாடுகளை ஆராயும் பட்சத்தில், அதன் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் அரசின் கட்டுப்பாடு உள்ளது.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் கட்டுப்பாட்டுக்குள்ளாக வரும் பிசிசிஐ, தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையின் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரை அங்கீகரிக்கவில்லை; இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை காரணமாக, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பான முடிவு அரசு வசமே உள்ளது.
பிசிசிஐ, தனியாத்திக்கச் செயல்பாட்டுடன் இருந்தாலும், பொது மக்கள் சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தன்னை ஒரு தனியார் அமைப்பாக காட்டிக் கொள்ளும் அதை, ஒரு பொதுத் துறையாகக் கருதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர இயலும்.
பிசிசிஐ, அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் வரிச் சலுகைகளை அனுபவித்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், 1997-2007 காலகட்டத்தில் ஏறத்தாழ ரூ.2,168.5 கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த 2007-08 காலகட்டத்தில், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 12ஏ-வின் கீழ் தொண்டு நிறுவனமாக பிசிசிஐ பதிவு செய்யப்பட்டிருந்தது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிசிசிஐ, ஏறத்தாழ ஒரு தேசிய விளையாட்டு சம்மேளனம் போலவே செயல்படுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பது, அதன் தரத்தை உயர்த்துவது, அதுதொடர்பான கொள்கைகளை வகுப்பது, சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வது இவையே பிசிசிஐயின் சட்டவிதிகளின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களாகும்.
பிசிசிஐ, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 12-இன் படி, இந்திய அரசு சார்பான ஓர் அமைப்பாகவே கொள்ளப்பட வேண்டும். மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி, மத்திய அரசானது பிசிசிஐ-ஐ ஒரு தேசிய விளையாட்டுச் சம்மேளனமாகவே கருத்தில் கொண்டுள்ளது. அந்த வகையில், இதர விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும்போது, பிசிசிஐக்கு ஏன் விலக்களிக்கப்பட வேண்டும்? என்று சட்ட ஆணையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








