23 ஆண்டுகள் முதல்வர் பதவி: ஜோதிபாசுவை முந்தினார் சிக்கிம் முதல்வர்

23 ஆண்டுகள் முதல்வர் பதவி: ஜோதிபாசுவை முந்தினார் சிக்கிம் முதல்வர்

ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை அதிகக் காலம் வகித்த பெருமையைப் பெற்று, சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை மேற்கு வங்க மாநில
Published on

ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை அதிகக் காலம் வகித்த பெருமையைப் பெற்று, சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் ஜோதிபாசு படைத்திருந்தார்.
சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை நிறுவிய பவன் சாம்லிங், கடந்த 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். அதிலிருந்து தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அவர் முதல்வர் பதவியை ஏற்று 23 ஆண்டுகள், 4 மாதங்கள், 17 நாள்கள் நிறைவடைந்தன.
அன்றைய தினம், முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, மின்டோகாங்கில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் விரும்பினால், முதல்வர் பதவியில் நீடிப்பேன். நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன். எனக்கென்று எந்த விருப்பமும் கிடையாது. இதற்கு முன் நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்றார் அவர்.
தெற்கு சிக்கிமில் உள்ள யாங்காங் நகரில் ஆஷா ராணி சாம்லிங்- ஆஷ் பகதூர் தம்பதிக்கு 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி மகனாகப் பிறந்த பவன் சாம்லிங், பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை தொடரவில்லை. இவர், தனது 32-ஆவது வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
1989 முதல் 1992 வரை, நார் பகதூர் பண்டாரியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற கட்சியை கடந்த 1993-ஆம் ஆண்டில் தொடங்கி, 1994-ஆம் ஆண்டில் முதல்வரானார். அப்போதிலிருந்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
அவருக்கு முன், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு கடந்த 1977-ஆம் ஆண்டில் இருந்து 2000-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்தார்.

அதன் பிறகு உடல் நிலையைக் காரணம் கூறி, முதல்வர் பொறுப்பை புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com