
ரஃபேல் ஒப்பந்த விவகாரம், தெலங்கானா தலைமைச் செயலகத்துக்குப் புதிய இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை வியாழக்கிழமை அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் உடனடி கேள்வி நேரம் வியாழக்கிழமை தொடங்கியதும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அந்த ஒப்பந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
எனினும், அவர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாமல், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவை அலுவல்களைத் தொடர்ந்தார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்குச் சென்று, பதாகைகளை ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் 20 நிமிடங்களுக்கு மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை மீண்டும் கூடிய பிறகு, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
டிஆர்எஸ் அமளி: தெலங்கானா தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடம் வழங்கக் கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, டிஆர்எஸ் கட்சி எம்.பி. ஜிதேந்தர் ரெட்டி, இதுதொடர்பாக கூறியதாவது:
தெலங்கானாவில் தற்போதைய தலைமைச் செயலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், செகந்திரபாத் நகரில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டியுள்ளது. இதேபோல், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை-1, மாநில நெடுஞ்சாலை-1 ஆகியவற்றை விரிவாக்கம் செய்யவும் நிலம் தேவைப்படுகிறது.
இந்தப் பணிகளுக்காக, பாதுகாப்புத் துறை வசம் இருக்கும் நிலத்தை மாநில அரசுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதை, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றோம். அவர்,
மாநில அரசுக்கு நிலம் ஒதுக்கப்படும், அதற்கு ஈடாக, 500 ஏக்கர் நிலத்தை பாதுகாப்புத் துறைக்கு மாநில அரசு மாற்றித் தர வேண்டும்; ரூ. 95 கோடி தர வேண்டும்'' என்றார். அவருடைய நிபந்தனைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து விட்டது. அதன் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜிதேந்தர் ரெட்டி கூறினார்.
அதைத் தொடர்ந்து, டிஆர்எஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






