பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் தமக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் தமக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி. ஹரி பிரசாத்தை விட 24 உறுப்பினர்களின் ஆதரவை கூடுதலாகப் பெற்றார்.
இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஹரிவன்ஷுவை அழைத்துச் சென்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான இருக்கையில் அமரவைத்தனர்.
அவை அலுவல்களை நடுநிலை தவறாது புதிய துணைத் தலைவர் நடத்துவார் என்று நம்புவதாக அப்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், ஹிந்தி நாளிதழான பிரபாத் கபர்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவராவார். அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் நீண்ட, நெடிய அனுபவம் கொண்ட அவர், முதுகலை பொருளாதாரம், இதழியல் பட்டப்படிப்புகளை நிறைவு செய்தவர்.
துணைத் தலைவர் தேர்தல்: மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த பி.ஜே. குரியனின் பதவிக் காலம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிறைவடைந்தது. ஏறத்தாழ, ஒன்றரை மாதங்கள் அப்பதவி காலியாக இருந்த நிலையில், அதற்கான தேர்தல் வியாழக்கிழமை (ஆக. 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆளும் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத் முன்னிறுத்தப்பட்டார். மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் பலம் அதிகம் இருப்பதால், இத்தேர்தலில் கடும் போட்டி நிலவியது.
அனைத்து எம்.பி.க்களிடமும் கட்சி பேதமின்றி இரு வேட்பாளர்களும் ஆதரவு திரட்டினர். பரபரப்பான இந்தச் சூழ்நிலையில், மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியது. அவையின் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷுவை முன்மொழிவதாக எம்.பி. ராம் பிரசாத் சிங் தெரிவித்தார்.
அதனை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, எம்.பி.க்கள் அமித் ஷா, சஞ்சய் ராவத், சுக்தேவ் சிங் திண்ட்ஸா ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து அதன் மீதான வாக்கெடுப்பை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்தினர்.
அப்போது சிலர் தவறுதலாக பொத்தான்களை அழுத்தியதாகத் தெரிகிறது. இதனால் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஹரிவன்ஷுக்கு ஆதரவாக 125 பேர் வாக்களித்தனர். எதிர்ப்பதாக 101 பேர் வாக்களித்தனர்.
இதையடுத்து, போட்டியில் ஆளும் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.பி.க்கள் பலர் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாஜக கூட்டணியில் இடம்பெறாத அதிமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளும் ஹரிவன்ஷுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி, பிடிபி புறக்கணிப்பு: வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சி தங்களிடம் ஆதரவு கோராததே புறக்கணிப்புக்கு காரணம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் தனிப்பட்ட காரணங்களால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேபோன்று திமுக தலைவர் கருணாநிதி மறைவால் அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி மாநிலங்களவைக்கு வியாழக்கிழமை வரவில்லை.
குறள் கூறி நன்றி!
மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அனைவருக்கும் நன்றி கூறிய ஹரிவன்ஷ், பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சாதவர்' என்ற குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். பகைவர் உள்ள போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர் இருக்கலாம். ஆனால், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே உள்ளனர் என்பது அதற்கு பொருளாகும். அவையில் அவர் மேலும் பேசியதாவது:
எளிய குடும்பத்தில் இருந்து வந்த நான் இன்றைக்கு இப்பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறேன். அவை அலுவல்கள் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார் அவர்.
முன்னதாக, ஹரிவன்ஷுக்கு பிகார் ஆளுநர் சத்ய பால் மாலிக், முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
ஜெய்பிரகாஷ் நாராயணனால் ஈர்க்கப்பட்டவர்

Story image


வாக்கெடுப்புக்கு பிறகு பிரதமர் மோடி அவையில் பேசியதாவது:
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் இருந்தவர் ஹரிவன்ஷ். ரிசர்வ் வங்கியில் பணிவாய்ப்பு கிடைத்தும் அதை மறுதலித்து செய்தியாளராகவே செயல்பட விருப்பப்பட்டவர் அவர். சமூக சீர்திருத்தவாதி ஜெய்பிரகாஷ் நாராயணின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஹரிவன்ஷ், முன்னாள் பிரதமர் சந்திரசேகரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அரசியல் நெருக்கடி காரணமாக சந்திரசேகர் பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. அதுகுறித்த தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அந்தச் செய்தியை தனது பத்திரிகையில் ஹரிவன்ஷ் வெளியிடவில்லை. அவர் கடைப்பிடித்த பத்திரிகை தர்மம் அத்தகையது. மாநிலங்களவையை திறம்பட வழிநடத்தி ஆக்கப்பூர்வமான அலுவல்களுக்கு அவர் வழிவகுப்பார் என நம்புவோம் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சோனியா விளக்கம்

Story image


மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி. 
சில நேரங்களில் வெற்றி வசப்படும்; சில நேரங்களில் அது வாய்க்காது; எனவே, இந்தத் தோல்வியை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் உள்ள குறைபாடு என கருதக்கூடாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.