மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நாடு முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர், தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரளத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இத்தகவலை, சுட்டுரையில் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அவரது மாத ஊதியம் ரூ.4 லட்சம் ஆகும்.
இதேபோல், அனைத்து எம்.பி.க்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடுவும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கேரளத்துக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அஸ்ஸாம் ரூ.3 கோடி அறிவிப்பு: தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்கள் கேரளத்துக்கு ஏற்கெனவே நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை ரூ.3 கோடி அறிவிக்கப்பட்டது.
2,500 டன் அரிசி: சத்தீஸ்கர் அரசு சார்பில் கேரளத்துக்கு ரூ.7.5 கோடி மதிப்பிலான 2,500 டன் அரிசி சிறப்பு ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார். கேரளத்துக்கு மருத்துவ குழுக்களை அனுப்பவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் என 100 பேர் அடங்கிய குழு, இரு விமானங்களில் திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை சென்றது. அவர்களுடன், மகாராஷ்டிர மருத்துவ கல்வித் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜனும் சென்றார். மகாராஷ்டிர அரசு சார்பில் ஏற்கெனவே ரூ.20 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர அரசு ஊழியர்கள் ரூ.20 கோடி: கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு ஊழியர்களின் சங்கம் சார்பில் ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒடிஸாவைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கேரளத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்த ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஒடிஸா மாநில தீயணைப்புப் படையினர் அடங்கிய சிறப்புக் குழுவையும் அனுப்பிவைத்தார்.
இதனிடையே, 10 லட்சம் பால் பாக்கெட்டுகள், 500 டன் கால்நடைத் தீவனங்கள், கால்நடைகளுக்கான மருந்துகள் ஆகியவற்றை குஜராத்தில் செயல்படும் தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம் திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









