சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங்குக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
விக்ரமாதித்ய சிங் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் வழக்குரைஞர்கள் என்.கே. மட்டா, நிதீஷ் ராணா ஆகியோர் ஆஜராகி, விக்ரமாதித்ய சிங்குக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதி அரவிந்த் குமார் கூறுகையில், ரூ.50,000 பிணைத் தொகை மற்றும் அதற்கு இணையான மதிப்பில் பிரமாண உறுதித் தொகை செலுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் விக்ரமாதித்ய சிங்குக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது; அதேபோல், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளை கலைக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது' என்றார்.
இதைத் தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி அரவிந்த் குமார் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மத்திய அமைச்சராக வீரபத்ர சிங் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், விக்ரமாதித்ய சிங்குக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை தில்லி சிறப்பு நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









