இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

3வது நாளாக கடுமையான பிரிவில் காற்று மாசு: மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தில்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடிக்கிறது.

News image
Updated On :24 டிசம்பர் 2018, 9:56 am

PTI

தில்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடிக்கிறது.

தலைநகர் தில்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், காற்றின் தரமும் கடுமையான பிரிவில் நீடிக்கிறது. காற்றின் தரம் கடுமையான அளவில் நீடிப்பதால், வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காற்று மாசு நிபுணர்கள் கூறுகையில், "கடுமையான பிரிவில் காற்றின் தரம் இருந்தால், உடல் ஆரோக்கியமுள்ள மக்களும் மூச்சு விடுவதற்கு சிரமத்தை எதிர்கொள்வர்" என்றனர். மருத்துவர்கள் கூறுகையில், "வெளிப்புறச் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்துகின்றனர்.

உச்சநீதிமன்றம் நியமித்த சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையகத்திற்கு பணிக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் வருமாறு: 
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசுவைக் கட்டுப்படுத்துவது, உயிரி எரிவாயு எரிப்பதைத் தடுப்பது ஆகியவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. அவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும். உயர் மாசு அளவு அதிகமாக உள்ள இடங்களில் தொழிற்சாலை கழிவுகளைக் கொட்டுவது அல்லது எரிப்பது ஆகியவற்றைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

நீர்த் தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது,  இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்துவதை தீவிரப்படுத்துவது, இலகுவான போக்குவரத்தை உறுதிப்படுத்த  போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை பணிக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் தனியார் வாகனங்கள் பயன்பாட்டைத் தவிர்க்கவும் குறிப்பாக அடுத்த மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு வெளிப்புறச் செயல்பாடுகளை குறைக்கவும்,  குறிப்பாக மூச்சுத் திணறல் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தில்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்றின் தரம் மோசம்,  மிகவும் மோசம்,  கடுமை ஆகிய பிரிவுகளில் மாறி, மாறி இருந்து வருகிறது.  வாகனப்புகை,  கட்டுமானச் செயல்பாடுகள்,   உயிரி எரிபொருள்கள் மூலம் இயக்கப்படும் ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை மாசு,   தில்லியின் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளின் புகை ஆகியவற்றால் தலைநகரில் காற்று மாசு நீடித்து வருவதாக சுற்றுச்சூழல்வியலாளர்களும்,  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர். 

 நிகழாண்டில் இரண்டாவது முறையாக அதிகபட்ச அளவில் காற்று மாசு ஞாயிற்றுக்கிழமை பதிவாகியது. விரும்பத்தகாத வானிலை சூழல், காற்றில் அடுத்த இரு தினங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் கடுமையான பிரிவில் காற்று மாசு இருக்கக் கூடும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புள்ளிவிவரத் தகவலில், தில்லியில் நேற்று 446 என்ற அளவில் காற்றின் தரம் கடுமையான பிரிவில்  இருந்த நிலையில் இன்று 445 ஆக உள்ளது. அதே சமயம், மத்திய அரசின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில், காற்றின் தரம் நேற்று 471 ஆக இருந்த நிலையில் இன்று 477 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இது இந்த ஆண்டிலேயே இரண்டாவது தடவையாக அதிகபட்ச அளவில் ஒட்டுமொத்த காற்று மாசு இருப்பதைக் காட்டுகிறது. கடந்த நவம்பர் 8-இல் அதாவது தீபாவளிக்குப் பிறகு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 571 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.

அசோக் விஹார்,  ஆனந்த் விஹார்,  வாஜிர்பூர் உள்ளிட்ட இடங்களில் மிகவும் கடுமையான பிரிவில் காற்றின் தரம் இருந்ததாக புள்ளிவிவரத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் காஜியாபாதில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 473 என்ற அளவிலும் ,  ஃபரீதாபாத், நொய்டாவில் கடுமையான பிரிவிலும் காற்றின் தரம் நீடித்தது. தில்லியில் ஒட்டுமொத்த பிஎம் 2.5 நுண்துகள் அளவு 402 ஆகவும் ,  பிஎம் 10 நுண்துகள் 580 ஆகவும் உள்ளது  என மத்திய மாசுக்  கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், "நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலை அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு நீடித்தால், கட்டுமான செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது,  கார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற அவசரநிலை நடவடிக்கைகள் உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று நேற்று கூறியிருந்தனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில் "நீடித்து வரும் மிதமான காற்று பருவ காலம், குறைந்த வெப்பநிலை  ஆகியவை அடுத்த  3 முதல் ஐந்து நாள்களுக்கு நீடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக,  மாசுபடுத்திகள் பரவல் குறைவாக இருக்கும். காற்றின் தரமும் அடுத்த மூன்று தினங்களுக்கு கடுமையான பிரிவில் தொடரும்' என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.