/

கோலாப்பூரில் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்: 12 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் 12 பேர்

Updated On :26 டிசம்பர் 2018, 2:31 am IST


மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். 
மகாராஷ்டிரத்தில் கர்நாடக மாநில எல்லையையொட்டியுள்ள கோவத் கிராமத்தில் பீம்சென் சவாண் என்பவர் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று தனது இல்லத்தில் வழிபாடு கூட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 25 பேர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது முகமூடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 15 பேர் வழிபாடு நடத்தியவர்களை சுற்றி வளைத்து கத்தி, இரும்புக்கம்பி, கண்ணாடி பாட்டில் போன்றவற்றால் தாக்கினர். மேலும், கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பிரார்த்தனையில் ஈடுபட்ட சில பெண்கள் மிளகாய்ப்பொடியை வீசினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். 
இந்தத் தாக்குதலில் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரார்த்தனை நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கக் கூடும் என போலீஸார் தெரிவித்தனர். உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். 
நிகழ்விடத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் தேஷ்முக் நேரில் விசாரணை நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கர்நாடகத்தின் பெலகாவியில் இருந்து வந்திருக்கக் கூடும் என்றும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் படப்பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.