

நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முன்னாள் முதல்வர் நேய்பியூ ரியோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர் திடீரென போட்டியிலிருந்து விலகிவிட்டதால், ரியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து பேரவைக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாகா மக்கள் முன்னணி, தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி), பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரியோ 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். என்டிபிபி கட்சி சார்பில் போட்டியிடும் அவருக்கு எதிராக நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் சஃபூ முன்னிறுத்தப்பட்டார். இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை, தாம் போட்டியிலிருந்து விலகுவதாக சஃபூ அறிவித்தார். மேலும், தனது வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற்றார். இதையடுத்து ரியோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் மொத்தம் 195 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாகா மக்கள் முன்னணி சார்பில் 58 பேரும், காங்கிரஸ் சார்பில் 18 பேரும், பாஜக சார்பில் 20 பேரும் தேர்தலில் களமிறங்குகின்றனர்.
மேகாலயம்: இதனிடையே, மேகாலயத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 372 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அவர்களில் 32 பேர் பெண்களாவர். இந்தத் தகவல்களை வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.