கோவா பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் பாரிக்கர்!

கோவா மாநில சட்டப் பேரவையில், முதல்வர் மனோகர் பாரிக்கர் வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததை அடுத்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, கோவா சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததை அடுத்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, கோவா சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்.
Updated on
1 min read

கோவா மாநில சட்டப் பேரவையில், முதல்வர் மனோகர் பாரிக்கர் வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கோவா மாநில பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், அதற்கு முன்னதாகவே முதல்வர் பாரிக்கருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால், கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சை பெற்றார். 
எனினும், அவர் குணமடையாததால், மருத்துவர்களின் ஆலோசனைப் படி, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கணைய அழற்சி பாதிப்பு இருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
எனவே, நிலைமை கருதி ஒரு மாதம் நடைபெற வேண்டிய பட்ஜெட் கூட்டத் தொடர், 3 நாள்களாகக் குறைக்கப்பட்டது. நிதித் துறையையும் தன் வசம் வைத்துள்ள பாரிக்கர், பேரவையில் சட்டப் பேரவையில் தாக்கல் பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அவர் உடல்நலம் தேறியதை அடுத்து, மும்பையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தலைநகர் பனாஜியை வந்தடைந்தார்.
பட்ஜெட் தாக்கல்: அதைத் தொடர்ந்து, கோவா சட்டப் பேரவையில் மதியம் 3 மணியளவில் நிதி நிலை அறிக்கையை அவரே தாக்கல் செய்தார். மிகவும் சோர்வாகக் காணப்பட்ட அவர், 5 நிமிடங்கள் மட்டுமே பட்ஜெட் உரையை வாசித்தார். உடல் நலக்குறைவு காரணமாக நிதி அறிக்கையை தன்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்று கூறி, தனது உரையை அவர் முடித்துக் கொண்டார். 
பின்னர், மதியம் 3.30 மணியளவில் சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கோவாவில் மொத்தம் ரூ.17,123 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6.84 சதவீதம் கூடுதலாகும். பினனர், அவர் பனாஜியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.
மக்களுக்கு நன்றி!: அதைத் தொடர்ந்து, தாம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பாரிக்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
நான் விரைவில் குணமடைய வேண்டி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பல்வேறு இடங்களில் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்; நான் முழுமையாக குணமடைவதற்கு மருத்துவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 
அதன்படி, இன்னும் சில தினங்களுக்கு பொதுமக்களைச் சந்திப்பது குறைவாகவே இருக்கும். அதன் பின்னர், எனது வழக்கமான கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவேன் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com