
புது தில்லி: ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமா என்பது குறித்து தீர்மானிக்கும் முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என கடந்த 2009-ஆம் ஆண்டு, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை 2013 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால், அது குறித்த விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை துவங்கியது.
இந்த வழக்கானது புதனன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் பிரமாணப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பத்திரத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை நீக்க கோரிய மனுவுக்கு எதிராக பதில் மனு எதையும் தாக்கல் செய்யப் போவது இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை, தீர்மானிக்கும் பொறுப்பினை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய அரசு தெரிவித்து விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.